தமிழகத்தில் இன்று நண்பகல் வரை 772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மட்டும் இன்று ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்று, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தன்னுடைய அதி தீவிரத்தைக் காட்டி வருகிறது. இதன் காரணமாக, நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே, சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகனின் மறைவுக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கொரோனாவால் உயிரிழந்த ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மவுன அஞ்சலி செலுத்தினார். சுகாதாரத்துறை செயலாளரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 
 
அதன்படி, சென்னை அரசு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். அதேபோல்,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும் என மொத்தம் என்று 24 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் அதிக பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7211 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், சென்னை தண்டையார்பேட்டையில் 5989 பேரும், தேனாம்பேட்டையில் 5655 பேரும், அண்ணா நகரில் 5397 பேரும், கோடம்பாக்கத்தில் 5316 பேரும், திரு.வி.க. நகரில் 4132 பேரும், அடையாறு மண்டலத்தில் 3057 பேரும், மாதவரத்தில் 1524 பேரும், ஆலந்தூரில் 1229 பேரும், அம்பத்தூரில் 1982 பேரும், வளசரவாக்கத்தில் 2201 பேரும், திருவெற்றியூரில் 1912 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

அதேபோல், சென்னையின் அண்டை மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி. அரசுக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,693 ஆகஉயர்வு

அதனை ஒட்டி உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,414 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நண்பகல் வரை 226 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முதலமைச்சரிடம் அமைச்சர் கே.சி.வீரமணி கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,672 ஆக உயர்ந்துள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது. 

தென்காசி நகர்ப்புற பகுதியில் முதல் முறையாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் மேலும் 60 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான உணவுகளைச் சாப்பிடுவது அவசியம்” என்று அறிவுறுத்தினார்.

“கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால்தான் கொரோனா வேகமாகப் பரவுகிறது” என்றும், - ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லியில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். காணொலி காட்சி மூலம் நடக்கும் ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப்சிங் பூரி பங்கேற்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் பொது முடக்க விதி மீறிய செயல்பட்டதாக 5,55,806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 82,385 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடையை மீறி வாகனங்களில் சுற்றிய 7,44,688 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், விதிமுறையை மீறியவர்களிடமிருந்து இதுவரை ரூ.15.65 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.