கொரோனா பரவலில், தமிழகத்தில் மட்டும் இது வரையிலான மொத்த பாதிப்பு 2,68,285 ஆக உள்ளது. இவர்களில், நேற்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 5,035 பேரும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 28 பேரும் அடங்குவார்கள்.

சென்னையில் மட்டும் செவ்வாய்க் கிழமையான நேற்று 1,023 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அளவில் நேற்று மேலும் 108 பேர் பலியாகியுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை தமிழகத்தில் 4349 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 6501 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,08784 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுக் குணமடைந்தவர்கள் வீதம் 77.80% சதவீதமாக உள்ளது. கடந்த சில தினங்களாகவே, இறப்பு சதவிகிதம் முன்பைவிட தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையும் உள்ளது. உதாரணத்துக்கு 6000 - த்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட போது வந்த இறப்பு எண்ணிக்கையைவிட, இப்போது 5,000 த்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட போது வரும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இன்னொரு பக்கம், சென்னை தவிர தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 

]இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு - உள்மாவட்டங்களில் கொரோனா பரவல் போன்றவையாவும், இரண்டாவது அலைக்கான தொடக்கமோ என்ற் அச்சம் மக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது. நேற்றைய தினம், ``தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள மக்கள் ஒத்துழைப்பு அவசியம்" என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியிருந்தது, கவனிக்கத்தக்க விஷயம். தமிழகத்தின் அடுத்தகட்ட நிலை குறித்தான மக்களின் பயம், இதனால் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமன்றி, இந்திய அளவிலும் கொரோனா தொற்று பரவலை  கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சூழல் எப்போது கட்டுக்குள் வரும் என்று அனைவருமே காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவி வருகிறது. அதன் தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வருகிறார். இன்று (5-ந் தேதி) பிற்பகல் 2 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சேலம் செல்கிறார். இரவில் சேலத்தில் தங்குகிறார்.

6-ந் தேதியன்று (நாளை) காலையில் சேலத்தில் இருந்து புறப்பட்டு கார் மூலம் திண்டுக்கல் செல்கிறார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

திண்டுக்கல் கலெக்டர் மற்றும் பல அதிகாரிகளுடன் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகள், விவசாயிகள், சுய உதவிக் குழுவினர் ஆகியோரை சந்தித்து உரையாற்றுகிறார்.

திண்டுக்கல்லில் இருந்து அன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றிய ஆய்வை மேற்கொள்கிறார்.

அங்கும் விவசாயிகள், குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார். இரவில் மதுரையில் அவர் தங்குகிறார்.

மதுரையில் இருந்து 7-ந் தேதி காலை புறப்பட்டு நெல்லைக்கு செல்கிறார். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அந்த மாவட்ட கலெக்டர், தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.

அங்கும் அரசுத் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதோடு, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விவசாயிகள், குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுகிறார்.

7-ந் தேதி மாலையில் நெல்லையில் இருந்து புறப்பட்டு சேலத்துக்கு செல்கிறார். சேலத்தில் 8 மற்றும் 9-ந் தேதிகளில் தங்குகிறார். பின்னர் 10-ந் தேதி காலையில் சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்னைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார்.