தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரசை முற்றிலும் கட்டுப்படுத்தும் விதமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இன்று முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி, நேரில் சென்று கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வார் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக இன்று முதலமைச்சர் பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினார். அத்துடன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த ஏல மையமானது 20 கோடியே 20 லட்சம் ரூபாய் அமைய உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி, முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனா போன்ற இக்கட்டான சூழலி​லும் எவ்வித சுணக்கமும் இன்றி, அரசு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருவதாக” பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

“கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கக் கூடுதலாக ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் தமிழகத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்குத் தேவையான கவச உடைகள், உபகரணங்கள் போதிய அளவு வாங்கப்பட்டுள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 11,919 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைவு” என்றும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

“இந்தியாவில் அதிக அளவிலான கொரோனா பரிசோதனைகளைச் செய்யும் மாநிலம் தமிழகம் தான் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, சென்னை மாநகராட்சியில் 600 க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது” என்றும் கூறினார்.

“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர் பழனிசாமி, “மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா நோய் பரவலைத் தடுக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழகத்திற்கு 672 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும், கொரோனா தடுப்பு பணிக்காகத் தமிழக அரசு 6,000 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளது” என்றும், முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.

“தமிழகம் முழுவதும் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறையும் வகையில், தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

“கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்படவில்லை” என்றும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

“கூட்டுறவு வங்கிக் கடன் குறித்து அந்தந்த வங்கிகளே முடிவு எடுக்கும் என்றும், கூட்டுறவு வங்கிக் கடன்கள் நிறுத்தம் என்பது தவறான தகவல்” என்றும்,  முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, நாளை சேலத்தில் ஆய்வு நடத்தும் முதலமைச்சர் பழனிசாமி, நாளை மறுநாள் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தும் அவர், பல்வேறு திட்டப் பணிகளையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.