“தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமை என்றும், நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய தருணம் இது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசி உள்ளார்.

தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து சில ஆண்டுகளாக 

முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள 13 கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

அதன் படி, திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். 

காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, பாரதிய ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், ரவிக்குமார், இடதுசாரி கட்சிகளின் சார்பில் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர்  பங்கேற்றனர்.

இப்படியாக 13 கட்சி பிரதிநிதிகளும் நடைபெற்ற இந்த அனைத்து சட்டமன்றக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில், ஒருமனதாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது, அனைத்து கட்சி கூட்டத்தில்  3 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட பிறகு உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும்” என்று, குறிப்பிட்டார். 

“காவிரி கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு முழு உரிமை இருக்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில், தமிழக மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதை கர்நாடகத்துக்கு மட்டுமல்லாமல், மத்திய ஒன்றிய அரசுக்கும் உணர்த்த வேண்டும்” என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளார்.

“மேகதாது அணை கட்டிவிட்டால், எப்படி தண்ணீர் வரும் என்பதே நமது கேள்வி?” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதாலேயே, இந்த அனைத்துக் கட்சி கூட்டம் தற்போது கூட்டப்பட்டு உள்ளது என்றும், மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை என கர்நாடகா கூறுவதில் துளி அளவும் உண்மை கிடையாது” என்றும், ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.
 
“மேகதாது அணை கட்டினால் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரின் அளவு அப்படியே குறையும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.

கூட்டத்தில், பாஜக சார்பில் பேசிய வி.பி. துரைசாமி, “மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்குத் தமிழக பாஜக முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்குத் தமிழக பாஜக ஆதரவளிக்கும் என்றும், தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தினாலும் ஆதரவு தருவோம்” என்றும், தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “மேகதாது அணை பிரச்சனை குறித்து அனைத்துக்கட்சித் தலைவர்களும் பிரதமரை சந்திக்க வேண்டும்” என்று, வலியுறுத்தினார். 

“பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் நியாயத்தை வலியுறுத்த வேண்டும் என்றும், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அணை கட்டுவதைத் தடுக்க தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் தெரிவித்தார்.