“ஏழை, எளிய மக்களை கை தூக்கி விடக்கூடிய அரசாக திமுக அரசு நிச்சயம் செயல்படும்” என்று, முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 ஆண்டுகள் பழமையான ஆனைப்புளி பெருக்க மர கல்வெட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

கல்வெட்டை திறந்து வைத்ததுடன் புராதன சின்னமான ஆனைப்புளி பெருக்க மரத்தையும் முதலமைச்சர் அங்கு சென்று பார்வையிட்டார். 

அதாவது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த இந்த கல்வெட்டில், ஆனைப்புளி பெருக்க மரத்தின் சிறப்பு இடம் பெற்று உள்ளது. 

ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த ஆனைப்புளி பெருக்க மரம், உலகின் பழமையான மரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 

பொந்தன்புளி ஆனைப்புளி பெருக்கமரம் எனப்படும் மரம் பல நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடியதாகவும், 37 அடி சுற்றளவு கொண்ட தண்டுடன் 65 அடி உயரம் கொண்டதாகத் திகழ்கிறது சென்னையில் உள்ள ஆனைப்புளி பெருக்கமரம். 

முக்கியமாக, இந்தியாவில் வெறும் 6 இடங்களில் மட்டுமே இந்த மரம் காணப்படுகிறது.

தொடர்ந்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மக்களைத் தேடி மருத்துவத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனையடுத்து, இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், “தனது பிறந்த நாளில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தவர் கருணாநிதி” என்று, குறிப்பிட்டார். 

“கண்ணொளி திட்டம், சைக்கிள் ரிக்ஷா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார் என்றும், அந்த வகையில் நானும் எனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் சென்னையில் உள்ள காது கேளாதோர் பள்ளிக்கு சென்று அவர்களுடன் அமர்ந்து பேசி அவர்களுடன் உணவருந்திக் கொண்டாடி வருகிறேன்” என்றும், கூறினார்.

மேலும், “வானுயர வள்ளுவருக்கு சிலை வைப்போம் என்றும், லட்சக் கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்க டைடல் பார்க்கை அமைப்போம்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“அதே நேரத்தில் ஏழைகளின் பசிக்கும் உணவளிப்போம் என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையானவற்றை வழங்குவோம்” என்றும் அவர் கூறினார். 

“குடிசை வீடுகளை மாற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்ற அடிப்படையிலும் பணியாற்றி வருகிறோம் என்றும், ஒரு வாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு திமுக அரசு அல்ல என்றும், ஏழை எளிய மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கி விடக்கூடிய அரசு திமுக அரசு” என்றும், அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, “அழாத குழந்தைக்கும் பால் கொடுக்கும் அரசாக திமுக அரசு இருக்கும் என்றும், அனைவரது கோரிக்கைக்கும் செவி மடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.