முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும், நாகூர் தர்காவில் இஸ்லாமிய முறைப்படி தொப்பி அணிந்தும் வழிபாடு நடத்தியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மையம் கொண்டிருந்த புயல் காரணமாக கொட்டி தீர்த்த கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகை மாவட்டம் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேட்டியை மடித்து கட்டி வயலில் இறங்கினார். 

மேலும், சேதமடைந்த நெற்பயிர்களை கையில் வாங்கி ஆய்வு செய்த முதலமைச்சர், முழங்கால் அளவு நீரில் நின்றபடி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது, புயலால் ஏற்பட்டுள்ள சேத நிலவரங்கள் குறித்து மாவட்ட சிறப்பு அதிகாரி ககன் தீப் சிங் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது, உலக புகழ் பெற்றுத் திகழும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்குச் சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு, ஆலய நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அவர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தார். 

அதனைத் தொடர்ந்து மாதாவிற்குத் தான் கொண்டு வந்த மாலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அருட்தந்தையிடம் வழங்கினார். பிரார்த்தனைக்குப் பிறகு பேராலய அதிபர் பிரபாகர், முதலமைச்சருக்கு பழனிசாமிக்கு மாதாவின் திருவுருவச் சிலையை  நினைவு பரிசாக வழங்கினர். அதனை முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, நாகூரில் அமைந்துள்ள சுமார் 460 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகூர் தர்காவின் தீர்த்தக்குளத்தில் சுற்றுச்சுவர் மழையில் சேதமடைந்ததைப் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, கழை மற்றும் வெள்ள சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இது தொடர்பாக சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அத்துடன், நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றார். அப்போது, அவர் குல்லா அணிந்தபடி, தொழுகையில் பங்கேற்று, நாகூர் தர்கா ஆண்டவர் சன்னதிகளில் துவா செய்தும் வழிபட்டார்.

அதன் பின்னர், அங்குள்ள மகிழி, கருங்கண்ணி, பலங்கள்ளி மேடு பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

இதனிடையே, “தமிழ்நாட்டில் புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பான அறிக்கை கிடைத்ததும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

அதே போல், “மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்பட்டுள்ளதாகவும்” முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.