நரிக்குறவர் இன மக்களின் வீட்டில் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தியதுடன், இட்லி, வடையும் சாப்பிட்ட நிகழ்வு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

சென்னை அடுத்த ஆவடி பகுதியில் கடந்த மாதம் நரிக்குறவர் இனைத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதியில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீங்கள் வசிக்கும் உங்கள் பகுதிக்கு நான் நேரில் வருகிறேன்” என்று, அப்போது முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். 

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று சென்னை திருமுல்லைவாயல் மற்றும் ஆவடி பகுதிகளில் உள்ள நரிக்குறவர் இன மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார். 

அதன்படி, சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதிக்குச் சென்ற முதலமைச்சர், அங்குள்ள நரிக்குறவர் குடியிருப்பு பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை, சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதன் தொடர்ச்சியாக, அங்கு உள்ள பொது மக்கள் மற்றும் மாணவ - மாணவிகளை சந்தித்து முதலமைச்சர் அவர்களிடம் கலந்துரையாடினார். 

அப்போது, ரோஜாப்பூ கொடுத்து முதல்வர் ஸ்டாலினை அப்பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் வரவேற்றனர்.

இந்த கலந்துரையாடலின் போது, முதலமைச்சருடன் சேர்ந்து அங்குள்ள பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

அப்போது, நரிக்குறவர் மக்கள் அணிவித்த ஊசி, பாசி மணிகளை முதல்வர் ஸ்டாலின் தனது கழுத்தில் அணிந்துகொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, அங்கிந்து ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு உள்ள மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பின் போது, அந்த பகுதியைச் சேர்ந்த தர்ஷிணி, பிரியா, திவ்யா அகிய மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, இந்த மாணவிகளின் வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அவர்கள் வழங்கிய இட்லி, மெதுவடை, நாட்டுக் கோழி குழம்பை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார். 

மிக முக்கியமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்த பள்ளி குழந்தைகளுக்கு உணவை ஊட்டி விட்டார். இதனை மகிழ்ச்சியுடன் பெற்றக்கொண்ட அந்த பள்ளி குழந்தைகள், முதல்வர் ஊட்டிவிட்ட இட்லியை சாப்பிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, நரிக்குறவர் இன மக்களுடன் சேர்ந்து அமர்ந்து முதலமைச்சர், அவர்களுடன் தேநீர் அருந்தினார். 

அதனைத் தொடர்ந்து ஆவடி பகுதியில் உள்ள நறிக்குறவர் இன பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

அதாவது, கடந்த மாதம் காணொலி வாயிலாக நரிக்குறவர் இன மாணவிகளிடம் முதலமைச்சர் போனில் வீடியோ காலில் பேசிய போது, “உங்கள் வீட்டிற்கு வந்தால், உணவு தருவீர்களா?” என்று, முதலமைச்சர் கேட்டிருந்தார். 

அதன் படியே, இன்றைய தினம், நரிக்குறவர் இன மக்களின் வீட்டிற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு அவர்கள் அளித்த உணவை விரும்பி சாப்பிட்டு, அவர்களுடன் தேனீர் அருந்தினார்.

இதனையடுத்து, அங்கு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழகும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மக்கள் நன்றாக இருந்தால், நான் மட்டுமில்லை சமூகமே நன்றாக இருக்கும்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “காரம் சாப்பிட்டால், உடல் வலுவாக இருக்கும் என்பதை தற்போது தெரிந்து கொண்டேன்” என்றும், முதலமைச்சர் தான் காரசாரமாக சாப்பிட்டதை சுட்டிக்காட்டி பேசினார்.

இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்றைய தினம் அளித்த தேனீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்த நிலையில், இன்றைய தினம் நரிக்குறவர் இன மக்களின் வீட்டில் தேனீருடன், இட்லி, வடை சாப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர்பான புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.