நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், வாலிபால் விளையாடி அசத்தியது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள பெரிய கொழுவாரி கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அதாவது, அங்குள்ள பெரிய கொழுவாரி கிராமத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் நினைவு சமத்துவபுரம் புதிதாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. 

சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் 1.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த சமத்துவபுரத்தில் கிட்டதட்ட 100 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. 

இங்கு கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஒரு வீடு 249 சதுர அடி வீதம், வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

அதே போல், இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 7.32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கலைஞர் விளையாட்டு மைதானமும் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், இங்குள்ள தெருக்களில் மின் விளக்குகள், தார் சாலைகள், மழைநீர் வடிகால் வசதிகள் என்று 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. 

அவற்றுடன், இங்கு புதிதாக வாழப்போகும் மக்களுக்காக, புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி, நியாய விலைக்கடை ஆகியவையும் புத்தம் புதிதாக தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக கட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டமான கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு கிடந்த நிலையில், தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், கிடப்பில் போடப்பட்ட இந்த வேலைகள் முழு வீச்சில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இந்த புதிய சமத்துவபுரத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அப்போது, இங்குள்ள சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்ட பெரியார் சிலைக்கு மலர் தூவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

பின்னர், அங்குள்ள புதிய குடியிருப்புகளை பார்வையிட்டு முதல் வீட்டையும் முதுல்வர் திறந்து வைத்து, அங்குள்ள பயனாளிகளின் கையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டின் சாவியையும் வழங்கினார்.

மேலும், இந்த சமத்துவபுரத்தில் உள்ள கலைஞர் பூங்கா, விளையாட்டு திடலை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு கூடியிருந்த இளைஞர்களின் மத்தியில் வாலிபால் விளையாடி அசத்தினார். 

அதன் படி, இளைஞர்கள் வாலிபாலை முதல்வரிடம் தந்த நிலையில், அதனை ஆர்வமாக பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சர்வீஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது, சிறிது நேரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்படி, வாலிபால் விளையாடியது, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட இந்த விழாக்களில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், பெரியகருப்பன், எம்.பி.க்கள் ரவிக்குமார், விஷ்ணுபிரசாத், கவுதம சிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், புகழேந்தி, எஸ்.பி. ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனையடுத்து, இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அனைத்து சமுதாய மக்கள் ஒரே இடத்தில் வசிப்பதற்காகவே சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது” என்று, சூளுரைத்தார். 

அதன் தொடர்ச்சியாக, “அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், “பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்றும், 1997 ஆம் ஆண்டு கலைஞரால் சமத்துவபுரம் தொடங்கி வைக்கப்பட்டது” என்றும் குறிப்பிட்டார்.

“தமிழ்நாடு முழுவதும் 238 சமத்துவபுரங்கள் கலைஞரால் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளன” என்றும், மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, அங்குள்ள ஒழிந்தியாப்பட்டு ஊராட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுமார் 10,722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.