தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு 2 முக்கியமான அசைன்மெட்டை பாஜக டெல்லி மேலிடம் கொடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணியானது, கடந்த 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி 2 வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டது முதல் தற்போது 2 ஆண்டுகள் முடிந்தும் இது வரையில் அமைச்சரவையில், எந்த விதமான மாற்றம் செய்யப்படாத நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா, சிரோமணி அகாலிதளம் கட்சிகள் அடுத்தடுத்து விலகிச் சென்ற நிலையில், அந்த கூட்டணி கட்சியில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

இதனால், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கும் வகையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்து, அதனை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 7 ஆம் தேதி புதிதாக விரிவாக்கப்பட்டம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.

அப்போது, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எல்.முருகன், தோல்வி அடைந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைவராக இருந்த எல். முருகன் சிறப்பாக செயல்பட்டதால், அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

இப்படியான சூழலில் தான், தமிழ்நாட்டில் தற்போது விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. இந்த இந்த தேர்தலுக்கு தமிழகத்தின் பிராதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. இதனால், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் இருந்த அதே கூட்டணியே இந்த உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது.

ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக மட்டும், திமுக பக்கம் வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், சீமான் எப்படியும் வழக்கம்போல தனியாகத் தான் நிற்பார் என்றும், நடிகர் கமல் எந்த முடிவில் இருக்கிறார் என்பது தெரியாத கதையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பாஜகவை பொறுத்த வரையில், வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலை காட்டிலும், அடுத்து வர உள்ள எம்.பி. தேர்தலை குறிவைத்தே உள்ளதாகவும், இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு 2 முக்கியமான அசைன்மெட்டை பாஜக டெல்லி மேலிடம் கொடுத்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் படி, மத்திய செய்தி ஒலிபரப்பு துறை சார்பில், தமிழகத்திற்காக ஒரு திட்டத்தை தயார் செய்து இணை அமைச்சர் முருகனிடம் தந்துள்ளதாகவும், அதில் “தமிழகத்தில் பாஜகவை எப்படி பலப்படுத்த வேண்டும், தமிழக பாஜக தலைவர்களை எப்படி மீடியாவில் பாஸிட்டியூவாக கொண்டு வர வேண்டும்” என்று, முற்றிலும் விரிவாக விவரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக, “தமிழகத்தின் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவிற்கு ஆலோசகர்களாக பாஜக தலைவர்களையோ அல்லது பாஜக ஆதரவு நிலைபாடுகொண்டவர்களோயோ நியமிக்க வேண்டும்” என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கு முக்கிய காரணம், “தமிழ்நாட்டில் பெரும்பாலான மீடியாக்கள் திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இதன் காரணமாகவே தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ் சேவைகளை பாஜகவிற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாலேயே, பாஜக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும்” செய்திகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக எம்.பி. தேர்தலை குறிவைத்து, தமிழக பாஜக தலைவர்களுக்கு தேசிய அளவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், இதன் மூலமாக தமிழகத்தில் வரப்போகும் எம்.பி. தேர்தலில், களத்தில் இறங்கி வேலை பார்ப்பதற்கும், இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறவும் நிச்சயம் முடியும் என்றும், பாஜக டெல்லி மேலிடம் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, இதுபோன்ற நடவடிக்கைகளால், தமிழகத்தில் நடைபெறும் எம்.பி. தேர்தலில் எப்படியாவது பாஜக 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்கான வேலையை இப்போதே தொடங்க வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் எல். முருகனிடம் இப்போதே பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி, கசிந்துள்ளன. இதனால், பாஜக தமிழக எம்.பி. பக்கம் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கி உள்ளதாகவும் தமிழக அரசியலில் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.