தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுவதாகவும் சில வாரங்களுக்கு முன் பாஜகவினரால் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் மனுவில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
 
வழக்கை, கடந்த நவம்பர் 5 விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு விசாரணை செய்த போது, பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதன் பின்னணியில், வரும் நாள்களில் கொரோனாவின் 2 வது, 3 வது அலை தாக்கம் தெரியக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், இந்த நிராகரிப்பை செய்வதாக அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த கட்ட வழக்கு விசாரணையில், வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் என்றும், மாநில அரசு இரு விண்ணப்பங்கள் மீதும் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மேலும் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். இதனைத்தொடர்ந்து தடை கோரிய இரு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. 

வழக்கின் முடிவு, தங்களுக்கு சாதகமாக வராதத்தை தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் வேல் யாத்திரைக்கு  தமிழக அரசு அனுமதி மறுத்தது குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.

அதன்முடிவில், கொரோனாவை காரணம் காட்டி யாத்திரைக்கு அரசு தடை விதித்திருப்பினும், தடை மீறி யாத்திரை நடக்கும் என கூறிய எல்.முருகன் சென்னையில் இருந்து இன்று காலை திருத்தணி புறப்பட்டு சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாரிடம், முருகனை தரிசிப்பது எனது உரிமை என பதில் அளித்து விட்டு சென்றார் எல்.முருகன்.

இதன்பின்னர், வேல் யாத்திரை இன்னும் தொடரும் என்று எல்.முருகன் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து, அனுமதி அளிக்குமாறு மீண்டும் நீதிமன்றத்தை பாஜக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நவம்பர் 10 விசாரணைக்கு வந்தபோது, வேல் யாத்திரை கோவில் யாத்திரை அல்ல, அது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என தமிழக டிஜிபி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 

மேலும் வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'பாஜக தலைவர் எல்.முருகன் பல இடங்களில் முகக்கவசம் அணியவில்லை. தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. யாத்திரையில் பங்கேற்போர் ஒருவர் கூட முகக்கவசம் அணியவில்லை. பல இடங்களில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றனர். அவர்கள் பேப்பரில் கொடுத்ததும், நீதிமன்றத்தில் சொல்வதும் வெவ்வேறாக உள்ளது. ஒரு மணி நேரத்தில் 10 கிலோமீட்டருக்கு குறைவாகவே அவர்கள் சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். வேல் யாத்திரை, கோவில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே' என வாதிடப்பட்டது. 

இப்படியான சூழலில், இன்றைய தினம் (நவம்பர் 12) செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் எனவும், திட்டமிட்டபடி டிச.,6ல் திருச்செந்தூரில் நிறைவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன், “ தீபாவளி பண்டிகை காரணமாக நேற்று முதல் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 17-ம் தேதி முதல் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரையை டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்வோம்.

வேல் யாத்திரையில் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். வருகிற 22-ம் தேதி அமைச்சர் சதானந்த கவுடா கோவையில் கலந்து கொள்கிறார். 23ம் தேதி முரளிதரன், 24-ம் தேதி கர்நாடக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அஸ்வினி, டிசம்பர் 2-ம் தேதி இளைஞரணிச் செயலாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் கலந்துக்கொள்கின்றனர்.

இறுதி நாளான டிசம்பர் 6ம் தேதி கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொள்ள இருக்கிறார். ஜே.பி. நட்டா கலந்துகொள்வது ஓரிரு நாளில் உறுதி செய்யப்படும். வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு; எங்கள் கொள்கைக்கு ஏற்றாற்போல நாங்கள் நடத்துகிறோம். கொரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல்யாத்திரை நடத்துகிறோம். கோவிலுக்கு யாத்திரையாக செல்வது மதம் சார்ந்த நிகழ்ச்சியா?. சாலையில் செல்பவர்களை எல்லாம் கைது செய்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? ” என்று கூறியிருக்கிறார்.

எல். முருகனின் இந்தக் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.