தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை பாஜக தலைமை நியமித்தது. தமிழக பாஜகவின் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கோயல்தான் கையாண்டார்.

அந்தவகையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பொறுப்பாளராகவும் கோயல் தான் இருப்பார் என்ற நம்பிக்கையில் தமிழகத்தில் அதிமுக உட்பட பல கட்சியினர் தனிப்பட்ட முறையில் கோயலைத் தொடர்பு கொண்டு வருகின்றனர்.

சமீப காலமாக தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து அதிமுக பற்றி விமர்சிப்பதையும் தமிழக பாஜக தனித்து நிற்கலாம் என்ற குரலில் பேசுவதையும் அதிமுக தலைமை தனது தொழிலதிபர் லாபி மூலமாக. கோயலிடம் பேசியிருப்பது குறித்தும் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் வித்தியாசமான உத்தியை அமைக்க தயாராகி வருகிறது பாஜக. அதன்படி தமிழக தேர்தல் பொறுப்பாளராக தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை நியமிப்பது பற்றி ஆலோசனை நடந்து வருவதாக டெல்லி பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

"தமிழக பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்று பல்வேறு எதிர்பார்ப்புகளும் யூகங்களும் நிலவிய நிலையில் எல். முருகனை நியமித்தது பாஜக தலைமை. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக என்பது பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்கும் கட்சி என்ற விமர்சனம் ஓங்கி இருந்த நிலையில் அதை உடைப்பதற்காக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முருகனை தலைவர் ஆக்கியது பாஜக.

அதேபோல தேர்தல் பொறுப்பாளர் விஷயத்திலும் தமிழகத்தில் இன்னும் சற்று தீவிரத்தை கடைபிடிக்க நினைக்கிறது பாஜக. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கருதப்பட்ட ராகுல் காந்தியை அவரது பாரம்பரியம் மிக்க தொகுதியான அமேதியில் தோற்கடித்தார் ஸ்மிருதி இரானி.

இங்கே பாஜகவுக்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட அமேதி தொகுதியில் பாஜக ஜெயிக்க முடியும் என்று திட்டமிட்டு செயல்பட்டு நிரூபித்தவர் ஸ்மிருதி இரானி. அதே அடிப்படையில் பாஜக காலூன்ற முடியாது, தளம் அமைக்க முடியாது என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிற தமிழகத்தில் பாஜகவை வெற்றி பெற வைக்க ஸ்மிருதி இரானி வகுக்கும் வியூகங்கள் உதவக்கூடும் என்ற அடிப்படையிலும் அவரை தமிழக பொறுப்பாளராக நியமிக்க ஆலோசனை நடந்து வருகிறது" என்கிறார்கள்

இதுகுறித்து தமிழக பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் விசாரித்தபோது, “ இதுவரை எங்களுக்கு அப்படி ஒரு தகவல் இல்லை. நீங்கள் சொல்வது போல் ஸ்மிருதி இரானியை நியமித்தால் தமிழக பாஜகவுக்கு புதிய உற்சாகம் கிடைக்கும்” என்கிறார்கள் அவர்கள்.

இதற்கிடையில் தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவரும் மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிலர் பாஜகவில் இணைந்தனர். இந்தி எதிர்ப்பு-வெறுப்பு இல்லை இதன்பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: 

``தமிழகத்தில் பாஜக அலைவீசுவதால் பல்வேறு தரப்பினர் இணைந்து கொண்டிருக்கின்றனர். தமிழக பாஜகவைப் பொறுத்தவரை தமிழுக்குத்தான் முக்கியத்துவம். அதற்காக இந்திய எதிர்க்கவோ வெறுக்கவோ இல்லை. திமுகதான் இதைவைத்து அரசியல் செய்கிறது. பாஜகவின் 4 மொழி கொள்கை தமிழ் நமது தாய்மொழி. அதனால்தான் முன்னுரிமை தருகிறோம். தமிழ் மொழி நமது தாய்மொழி. ஆங்கிலம் நட்பு மொழி. சமஸ்கிருதம் நமது வேத மொழி. இந்தி மொழி படிக்க வேண்டிய மொழி. இதனைத்தான் பாஜக செயல்படுத்தி வருகிறது.

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் போட்டியிடுவேன். இந்த தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் ஏற்கனவே போட்டியிட்டிருக்கிறார். இங்கு போட்டியிட்டு பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார். இதனால் அவருக்குத்தான் அங்கு வாய்ப்புகள் அதிகம். கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் கன்னியாகுமரியில் போட்டியிடுவேன். 

பாஜ்க கூட்டணியில் அதிமுக இருந்து வருகிறது. இதனால் தேர்தலில் அதிக இடங்களை கேட்டுப் பெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி; அதிமுக- பாஜக கூட்டணிதான். மூன்றாவது அணி என்பதெல்லாம் இப்போதைக்கு இல்லை. தேர்தல் நெருங்கும் நிலையில்தான் யார் பிரிவார்கள்? யார் சேருவார்கள்? என்பதும் தெரியவரும்" என்றார் அவர்.