கொரோனா தொற்று காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல பணிகள் ஸ்தம்பித்துள்ளன. அரசு தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றபோதிலும், கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் குறையவில்லை. ஒவ்வொரு நாளும் 6,000த்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

அரசுப் பணிகளில் 50 சதவீத பணியாளர்களைப் பயன்படுத்த கடந்த ஊரடங்கின்போது தளர்வு அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட  ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக, 5 மாதங்களுக்குப் பின் பேருந்துகள் இயக்கம் இன்று தொடங்கப்பட்டன. பேருந்துகளில் பாதிக்கும் குறைவாகவே பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அறிவித்துள்ள நிலையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. சென்னையில் 3,300 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. ஒரு பேருந்தில் 24 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் பேருந்துகள் ஓடுகின்றன. இதேபோல வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. பக்தர்கள் அதிகம் கூடியதால், இயல்பு நிலை வந்துவிட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகம் உள்ளது. தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களில் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீத உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் கட்டாயம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. தற்போதுள்ள சட்டப்பேரவைக் கட்டிடம் பழமையான ஒன்று. உறுப்பினர்கள் போதிய இடைவெளியுடன் அமர முடியாத வகையில் உள்ளது.

இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தை எங்கு நடத்துவது என சபாநாயகர் தனபால் ஆலோசித்து வந்தார். இதுதொடர்பாக அவர் கடந்த மாதம் (ஆகஸ்ட் 22) பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ``சட்டப்பேரவை கூடுவதற்கு தகுந்த இடம் வேண்டுமென்று கலைவாணர் அரங்கத்தில் இந்த இடத்தைப் பார்த்துள்ளேன். முடிவு செய்து பின்னர் அறிவிப்போம். கலைவாணர் அரங்கில் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும் சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதுபற்றி பின்னர் அறிவிப்போம்” என்று கூறியிருந்தார்.

கொரோனா அச்சம் இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில், கூட்டம் நடத்தும் அளவிற்கு போதிய இடவசதி இல்லை என சொல்லப்பட்டது. அதனால்தான் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து சட்டப்பேரவை செயலகம் ஆலோசனை மேற்கொண்டு வந்தது. ஆனால் இடையில், கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடரை நடத்துவதற்கான பணிகளையும் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை வரும் 14ம் தேதி கூடுகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அந்தத் தகவலில், வரும் 14ம் தேதி காலை 10 மணி அளவில் கலைவாணர் அரங்கத்தில் சட்டப் பேரவை கூடும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்திற்கு முன்பாக எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, நீட்தேர்வு ரத்து தொடர்பான சர்ச்சை, ஊரடங்கில் தளர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, பொருளாதார பின்னடைவு உள்பட பல்வேறு பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினைகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளதால் இந்த சட்டசபை கூட்டம் காரசாரமான விவாதங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது