காதலனை கழற்றிவிட்ட காதலி மீது கடும் ஆத்திரமடைந்த காதலன் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் புழல் புத்தகரத்தைச் சேர்ந்த பிரேமலதா என்ற இளம் பெண், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். 

அதே நேரத்தில், இளம் பெண் பிரேமலதா, அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். 

இருவரும் காதலர்களாக அந்த பகுதியின் பல இடங்களுக்கு சென்று ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, இவர்களது காதல் சென்றுகொண்டிருந்த நிலையில், காதலன் சுதாகரின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் இருந்துள்ளன. இதனை கவனித்த அந்த இளம் பெண் பிரேமலதா, காதலனின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அவரை விட்டுப் பிரிய முடிவு செய்தார். அதன்படி, காதலனிடம் கடந்த சில நாட்களாகவே அவர் பேசாமல் இருந்து வந்துள்ளார். 

இது தொடர்பாக காதலன், பல முறை விளக்கம் கேட்டும், அந்த இளம் பெண் எந்த விளக்கம் கொடுக்காமல் விலகிச் சென்றதாகத் தெரிகிறது. இதனால், காதலி மீது கடும் கோபம் கொண்டார் அந்த காதலன் சுதாகர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான காதலன் சுதாகர், அதிகாலை நேரத்தில் காதலி பிரேமலதாவின் வீட்டின் அருகே மறைவான இடத்தில் காத்திருந்து உள்ளார். 

அப்போது, அதிகாலை நேரத்தில் அந்த இளம் பெண், இயற்கை உபாதை கழிக்க வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, அந்த வீட்டின் பின்புறம் மறைந்திருந்த காதலன் சுதாகர், “ஏன் என்னிடம் நீ பேசுவதில்லை?” என்று, கேட்டுக் கத்திக்கொண்டே, பிரேமலதாவின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் சரமாரியாகக் குத்தி உள்ளார். இதில், அவர் அளறித்துடிக்கவே, சுதகார் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதனால், இளம் பெண் பிரேமலதா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்த பிரேமலதாவின் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது குறித்து தகவல் புழல் காவல் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான காதலன் சுதாகரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இந்த நிலையில், மாதவரம் வி.எஸ். மணியன் நகரில் மின்சார கம்பத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகத் தொங்குவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தலைமறைவான சுதாகர் தான், தூக்கில் தொங்கியிருப்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து, சுதாகரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.