திருவள்ளூர் அருகே ஸ்டூடியோ அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, “மனைவியுடனான கள்ளக் காதலை கைவிடாததால் கொலை நடந்துள்ளது” என்று, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் வீரராகவர் சாமி நகரை சேர்ந்த 36 வயதான தினேஷ் குமார் - அனிதா தம்பதிக்கு ஒரு மகள் உள்ளனர். தினேஷ் குமார், காக்களூர் புட்லூர் செல்லும் சாலையில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 31 வயதில் அனிதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். 

இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் - அனிதா இருவரும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

இதனையடுத்து, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி தினேஷ் குமார், கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், கடைக்குள் புகுந்து தினேஷ் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த தினேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அதன்படி, இந்த கொலை வழக்கு சம்பந்தமாகச் சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த 33 வயதான பிரகாஷ், அவரது கூட்டாளிகளான ராயபுரத்தை சேர்ந்த 25 வயதான அப்துல் அஜீஸ், எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 25 வயதான ராஜி, எர்ணாவூரை சேர்ந்த கார்த்திக், எண்ணூரைச் சேர்ந்த மகேஷ், தண்டையார்பேட்டை சேர்ந்த சூரியா ஆகிய 6 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. விசாரணையில், “கைது செய்யப்பட்ட பிரகாஷ் என்பவர், சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தன் மனைவி 32 வயதான கோட்டீஸ்வரி மற்றும் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார் என்றும், ஆனால் இதற்கு முன்னதாக அவர்கள் திருவள்ளூர் அடுத்த காக்களூரில் வசித்து வந்ததும்” தெரிய வந்தது. 

அப்போது, “பிரகாஷ் மனைவிக்கும் அப்பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்த தினேஷ் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியுள்ளது. இந்த விசயம் தெரிந்து கடும் அதிர்ச்சியடைந்த பிரகாஷ், தினேஷ் குமாரை நேரில் அழைத்து கள்ளக் காதலை கை விடும் படி அறிவுறுத்தி” உள்ளார்.

“ஆனால், அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தன் கள்ளக் காதலைத் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக” கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பிரகாஷ், தினேஷின் மனைவி அனிதாவிடம் கள்ளக் காதல் விசயத்தைப் பற்றி கூறியுள்ளார். இதனால், தினேஷ் அவர் மனைவி அனிதா இடையே பிரச்சனை ஏற்பட்டு, அவர்கள் பிரிந்து விட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, பிரகாஷ் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னை புதுவண்ணாரப்பேட்டைக்கு வந்த பிறகும், அவர்களுக்கு இடையே கள்ளக் காதல் மட்டும் தொடர்ந்துகொண்டே இருந்துள்ளது. இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த பிரகாஷ், தன் மனைவியிடம் சண்டைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த சண்டையில் பிரகாஷ், தன் மனைவியை அடித்து உதைத்து உள்ளார். இதில், ஆத்திரமடைந்த அவர் மனைவி, கணவன் பிரகாஷ் மீது காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் தொடர்ச்சியாக பிரகாஷை கைது செய்த போலீசார், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த பிரகாஷ், தன் மனைவியின் கள்ளக்காதலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இந்த கள்ளக் காதலுக்கு முடிவு கட்ட தன் நண்பர்களுடன் சேர்ந்து தினேஷ்குமாரை கொலை செய்துள்ளார்” என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.