தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை 464 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஜீவா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாகவும், நடத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் பள்ளி தலைமையாசிரியை் ஜீவாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டைக்கு மாற்றம் செய்து அதிகாரிகள் ஆணை பிறப்பித்தனர். ஆனால் அவர் தனக்கு மாற்றம் பிறப்பித்த பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இந்த பள்ளியிலேயே பணியாற்றி வருகிறார். இதனால் இந்த பள்ளியில் வேலை செய்து வந்த 5 ஆசிரியைகள் கடந்த மாதம் வேறு பள்ளிக்கு மாற்றம் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டனர். இதனால் இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து மேலும் பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவிகள் அவதிக்குள்ளானார்கள். இதனால் மாணவிகள் மனமுடைந்து நேற்று வகுப்புகளை புறக்கணித்து காந்தி சிலை அருகில் கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு பள்ளிப்பட்டு போலீசார் விரைந்து சென்றனர். மாணவிகளை அமைதிப்படுத்தி வகுப்பறைகளுக்கு திரும்ப செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர்.

ஆனாலும் மணிகள் அனைவரும்  தலைமை ஆசிரியையை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும் இல்லை என்றால் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும் என்று அச்சம் தெரிவித்தனர். இதனால் போலீசார் ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்து நின்றனர்.

மேலும் குறித்து திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் அருள்அரசுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் மாணவிகளின் குறைகளை அமைதியாகக் கேட்டார். அதன்பிறகு மாணவிகளின் குறைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதன்பின்னர் பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்வது தொடர்பாக மாநில கல்வி அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து 3 மணி நேர போராட்டத்தை கை விட்டு மாணவிகள் அமைதியாக பள்ளிக்கு திரும்பி சென்றனர்.