திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் சட்டையைப் பிடித்த பாஜக பிரமுகர் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். 

தமிழக பாஜக சார்பில் நேற்று முன் தினம் வெற்றி வேல் யாத்திரை நடத்தப்பட்டது. தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட பாஜக வினரை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களைக் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையிலான போலீசார், கைது செய்யப்பட்டவர்களை அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். 

அப்போது, அந்த மண்டபத்தில் மின்சாரம் இன்றி இருந்ததால் அங்கு அடைக்கப்பட்ட பாஜவினர் ஆத்திரமடைந்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், சாலை மறியல் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

பாஜகவினர் திடீர் போராட்டத்தால், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பாஜக தொண்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணை தலைவர் ஒம் சக்தி செல்வமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சட்டையைப் பிடித்துத் தள்ளியதாகத் தெரிகிறது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலைக் கவனித்த அங்கு வந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக பிரமுகருமான அண்ணாமலை, தங்கள் கட்சியினரைச் சமரசம் செய்து போராட்டத்தைக் கைவிட செய்து, மீண்டும் அவர்களை மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

ஆனால், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணை தலைவர் ஒம் சக்தி செல்வமணியை, இன்று அதிகாலை நேரத்தில் திருத்தணி போலீசார் தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். அப்போது, அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. 

அதன் பின்னர், “அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக, காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணை தலைவர் ஒம் சக்தி செல்வமணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தனின் சட்டையை கூட்டத்தில் பிடித்தது தள்ளியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில், “உள் நோக்கத்துடன் அவர் செய்யவில்லை” என காஞ்சிபுரம் மாவட்ட துணை தலைவர் செல்வமணி கூறினார். இதனையடுத்து, அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனால், பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு சற்று நேரத்தில் அடங்கியது.

இதனிடையே, தமிழக அரசின் தடையை மீறி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீண்டும் வேல் யாத்திரையை தொடங்க உள்ளதால், சென்னை திருவொற்றியூரில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.