“உடனே எனக்கு திருமணம் வேண்டும்” என்று அடம் பிடித்த மகனை, தாயே உலக்கையால் அடித்துக்கொன்ற சம்பவம், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து உள்ள ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நல்லசாமி - 55 வயதான தமிழரசி தம்பதிக்கு 30 வயதில் சதீஷ், 27 வயதில் சிதம்பரம் ஆகிய இரு மகன்கள் இருந்தனர். 

இவர்கள் இருவரில் மூத்த மகன் சதீஷ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால், இளைய மகன் சிதம்பரம் திருமணம்  ஆகாத நிலையில், வீட்டில் தனது பெற்றோருடன் இருந்து வந்தார். இவர், ஜேசிபி ஓட்டுநராக அந்த பகுதியிலேயே பணியாற்றி வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இவருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆனாலும், அவருக்கு பெண் பார்ப்பதில், தாமதம் ஆகி உள்ளது.  

இதனால், “எனக்கு உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும்” என, தனது அம்மாவிடம் அவர் தொடர்ந்து பல மாதங்களாக சண்டை போட்டு விட்டு வந்து உள்ளார். இந்த சண்டை அவ்வப்போது தொடர்ந்து கொண்டே வந்து உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்றைய தினம் இரவு 7 மணி அளவில் “எனக்கு உடனடியாக இப்பவே திருமணம் செய்து வை” என்று, தனது அம்மாவிடம் கூறி, அடம் பிடித்து சண்டை போட்டு உள்ளார். இதில், சண்டை  பெரிதாகவே, மகனின் இந்த எதிர்பாரத செயலால் கடும் ஆத்திரம் அடைந்த சிதம்பரத்தின் தாயார், அருகில் கிடந்த உலக்கையை எடுத்து தன் மகனை அடித்து உள்ளார்.

இதில், மகன் சிதம்பரத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதில் சிதம்பரம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த நிலையில், அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மகன் உயிரிழந்த பிறகு, தனது, மகனின் உடலைப் பார்த்து, அந்த தாயார் கதறி அழுதார்.

இதனையடுத்து, “எனது மகனை நானே அடித்துக் கொன்று விட்டதாக” அங்குள்ள அலங்கியம் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்கியம் காவல் துறையினர், மகன் சிதம்பரத்தின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மகனை கொலை செய்த தாயார் தமிழரசியை, போலிசார் அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, “எனக்கு உடனே திருமணம் செய்து வை” என்று அடம் பிடித்த மகனை, தாயே உலக்கையால் அடித்துக் கொன்ற சம்பவம், திருப்பூர் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், சென்னை டிஐஜி அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மேலமனக்குடி பகுதியைச் சேர்ந்த 40 வயதான லோகசுந்தரம், இன்று விழுப்புரத்தில் உள்ள காவல் துறை துணை தலைவர் அலுவலகத்தில் தனது குடும்ப பிரச்சனை தொடர்பாக புகார் மனு கொடுக்க வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனது உடம்பில் ஊற்றிக் கொண்டு, தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. 

இதனைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அங்கு பணியில் இருந்த போலீசார், ஓடிச் சென்று அவரை மீட்டு உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, 50 சதவீதம் தீக்காயங்களுடன் அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம், அந்த மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.