“வேலியே பயிரை மேய்ந்த கதையாக” வழி தவறி வந்த பசுமாட்டை தலைமை காவலர் ஒருவர் விற்று, பணத்தை பங்குபோட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குனத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் தான், வேலியே பயிரை மேய்ந்த கதைக்கு உதாரணம் ஆகிப்போய் இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவிநாசி அருகே உள்ள குனத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பசு மாடு ஒன்றும், யாரும் உரிமை கோராத நிலையில், சில நாட்களாக இந்த பகுதியில் மேய்ந்துகொண்டிருப்பதாகத் தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற குனத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் ரங்கநாதன், அந்த மாட்டை பற்றி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தவரிடம் விசாரித்து உள்ளார். அதன் படி, “அந்த பசு மாடு சில நாட்களாக எங்கிருந்தோ வந்து, இந்த பகுதியில் மேயந்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. 

இதனால், சற்று வேறு மாதிரி யோசித்த குனத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் ரங்கநாதன், அந்த பசு மாட்டை 30 ஆயிரம் ரூபாயக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. பசு மாட்டை விற்பனை செய்த பணத்தில், காவல் ஆய்வாளர் மற்றும் ஓட்டுநருடன் அவர் பங்கிட்டுக்கொண்டதாகவும் காவல் நிலைய வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தன.

போலீசார் வட்டாரத்தில் இந்த தகவல் பெரிய அளவில் பரவிய நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டலின் கவனத்திற்கும், இந்த தகவல் சென்று உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா, தனிப்பிரிவு தலைமை காவலர் ரங்கநாதன், அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி, அவர் சேயூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். 

மேலும், பசு மாட்டை விற்று பங்குப் போட்ட மற்ற காவர்களும், அடுத்தடுத்த நாட்களில் தண்டிக்கப்படுவார்கள் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, வேலியே பயிரை மேய்ந்த கதையாக, வழி தவறி வந்த பசுமாட்டை தலைமை காவலர் ஒருவர் விற்று, பணத்தை சக காவலர்களுடன் பங்கு போட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.