ஆசிரியரின் கை கால்களை கட்டிப்போட்டு கத்தியால் குத்தி, தலை மீது காரை ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட பங்களாமேடு பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம், வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான தகவலை, அப்பகுதி மக்கள் நாட்றம்பள்ளி காவல் துறையினருக்கு தெரியப்படுத்தினர்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கா அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை 
மேற்கொண்டார்.

இந்த விசாரணையில். உயிரிழந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து உள்ள சந்தூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான சிவகுமார் என்பது தெரிய வந்தது.

அத்துடன், உயிரிழந்த சிவகுமார், ஊத்தங்கரை அருகேயுள்ள ஜோதி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தான், பணியில் சேர்ந்துள்ளதும் தெரிய வந்தது.

மேலும், உயிரிழந்த சிவகுமாருக்கு விக்டோரியா என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் என 2 பிள்ளைகள் இருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. 

அதே நேரத்தில், உயிரிழந்த சிவகுமாரை நாட்றம்பள்ளி பங்களாமேடு பகுதியில் வைத்து அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு சரமாரியாகக் கத்தியால் குத்தியதும், அதன் பிறகு, அவரை ரத்த வெள்ளத்தில் தலையில் கட்டி படுக்க வைத்து, அவர் தலை மீது மிகவும் கொடூரமான முறையில் காரை ஏற்றி கொலை செய்துவிட்டு, அவரது உடலைத் தூக்கி வீசிச் சென்றதும் தெரிய வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இச்சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.