நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானையின் காலில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்யும் விதமாக,  12 000 ரூபாய் மதிப்பிலான தோல் செருப்புகளை பக்தர்கள் தயாரித்து வழங்கி உள்ள சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் கோயில், தமிழக திருக்கோயில்களில் மிக முக்கியமான கோயிலாக புகழ் பெற்று திகழ்கிறது.

அதாவது, திருநெல்வேலி டவுண் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் அமைய பெற்று, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது.

இந்த கோயிலுக்கு, தன்னுடைய 13 வயதில் வந்த காந்திமதி என்ற யானை வந்திருக்கிறது. இப்படியாக 13 வயதில் இந்த கோயிலுக்குள் வந்த அந்த யானைக்கு தற்போது 52 வயதாகிறது. 

அதாவது, உலக புகழ் பெற்று திகழும் இந்த நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு தோறும் எல்லா மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். 

என்றாலும், இந்த திருக்கோயிலில் ஆனி தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. 

அதுவும், கடந்த 2 ஆண்டு கால கொரோனா ஊரடங்கு பாதிப்பு காரணமாக, இந்த கோயிலில் தேர் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், சுவாமி - அம்பாள் உள்ளிட்ட 5 தேர்கள் முழுவதும் மனித சக்தியால் இழுக்கப்படும் இந்தாண்டு தேர் திருவிழா நாளைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் தான், தினமும் சுவாமி - அம்பாள் ரத வீதியில் உலா வரும் போது, யானை காந்திமதி முன் செல்வது நெல்லையப்பர் கோயிலில் வழக்கமான ஒன்றாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல கற்கள் குத்தாமல் இருக்கும் வகையில், பெற்றோர்கள் செருப்பு வாங்கி கொடுத்து குழந்தைகளை பராமறிப்பது போலவே, 52 வயதாகும் காந்திமதி யானையையும் ஒரு குழந்தையாக பாவித்து வரும் நெல்லை வாழ் பக்தர்கள், அந்த யானையை மிகவும் பாசத்துடன் நாள்தோறும் பராமரித்து வருகின்றனர். 

குறிப்பாக, கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த யானையை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டபோது, “காந்திமதி யானையானது, வயதுக்கு ஏற்ற எடையை தாண்டி கூடுதலாக 300 கிலோ உள்ளது என்றும், இதனால் இந்த யானையின் எடையை குறைக்க வேண்டும்” என்றும், மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர்.

இதனால், 52 வயதாகும் இந்த கோயில் யானைக்கு, காந்திமதிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

அத்துடன், யானையின் உடல் எடை குறித்து மருத்துவ குழுவினரின் பரிந்துரையின் பேரில், தினமும் யானையை வாக்கிங் அழைத்துச் செல்வது, அதிக இனிப்பு உள்ள கரும்பை குறைவாக கொடுப்பது, நார்ச்சத்து மிகுந்த உணவு அதிகம் கொடுப்பது என்று தொடர்ச்சியாக உணவு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனால், இந்த காந்திமதி யானை கடந்த 6 மாதத்தில் 150 கிலோ எடை குறைந் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது யானையின் சரியான எடையை அடைந்திருந்தாலும், வயது முதிர்வின் காரணமாகவும் யானைக்கு மூட்டு வலி ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அங்குள்ள சாலைகளில் கோயில் யானை செல்லும் போது, மிகவும் கவனத்துடன் அழைத்துச் செல்லும் நிலை இருப்பதால், இந்த யானை நீண்ட நேரம் நடப்பதற்கும், நிற்பதற்கும் சிரமப்படுவதாகவும் மருத்துவ குழுவினர் கூறி உள்ளனர்.

மேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள காந்திமதி யானையானது, நடக்கும்போது கால் வலி ஏற்படாமல் இருக்கவும், மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும் மருத்துவ குணம் வாய்ந்த 12 000 ரூபாய் மதிப்பிலான தோல் செருப்புகளை செய்து, அந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் தற்போது யானைக்கு அணிவித்து உள்ளனர். 

இது தொடர்பான ஏற்பாடுகளை நெல்லை வியாபாரிகள் சங்கம் மற்றும் நெல்லையப்பர் கோயில் பக்தர்கள் சார்பில், நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு புதிய செருப்புகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.