திருநெல்வேலி அருகே 16 வயது சிறுமியைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்த 34 வயது இளைஞருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்து உள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே உள்ள மருதமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான சிவன் பெருமாள், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அந்த பள்ளியில் படித்துக்கொண்டு வந்துள்ளார். அந்த 16 வயது சிறுமியிடம் அவ்வப்போது பின் தொடர்ந்து செல்லும் அந்த இளைஞன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த சிறுமியின் மனதை மாற்ற முயன்றுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், அந்த இளைஞனை நம்பிய அந்த சிறுமி, சிவன் பெருமாளிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் என்றும், கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி சிறுமிக்கு சிவன் பெருமாள் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றும், குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், பயந்து போன அந்த சிறமி தனது பெற்றோரிடம் கூறி அழுதார் என்றும், இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிவன் பெருமாளை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிபதி இந்திராணி தீர்ப்பு வழங்கினார். அதன் படி, “குற்றம்சாட்டப்பட்டு உள்ள சிவன் பெருமாளுக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து” நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், அபராதம் “விதிக்கப்பட்ட தொகையைச் சிறுமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதனையடுத்து, அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். 

அதே போல், 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்து உள்ள இ புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, கடந்த 2015 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, காதல் என்ற பெயரில் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். அத்துடன், அந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று, அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மல்லசமுத்திரம் காவல் துறையினர், சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சின்னதம்பி மற்றும் அவருக்கு உதவியதாக ராமசாமி என்கிற கதிர்வேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த பிறகு, சின்னதம்பிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சிறுமியை கடத்த சின்னத்தம்பிக்கு உதவிய அவனது நண்பன் ராமசாமி என்கிற கதிர்வேலுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து, இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.