திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக பெண்ணை மர்ம நபர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்து உள்ள விழுக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி 49 வயதான கன்னியம்மாள், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக, அந்த பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனியாகவே வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு எப்போதும் போல் அந்த பெண் வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, நள்ளிரவு நேரத்தில் அங்கு மது போதையில் வந்த மர்ம நபர்கள் சிலர், அந்த பெண்ணை தாக்கி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

அப்போது, அந்த பெண் முரண்டுப் பிடிக்கவே, ஆத்திரமடைந்த அந்த மர்ம கும்பல், அந்த பெண்ணின் கழுத்தைக் கொடூரமான முறையில் அறுத்து கொலை செய்து உள்ளனர்.

இதனையடுத்து, இன்று காலை விடிந்ததும் கன்னியம்மாள் கொலை செய்யப்பட்டது விசயம் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இதனையடுத்து, மதியத்திற்கு மேல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எதார்த்தமாக கன்னியம்மாள் வீட்டிற்கு அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்போது, அந்த பெண் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால், பதறிப்போன அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக அந்த உடலை முதன் முதலாகப் பார்த்தவர்களிடமும், அந்த பகுதி மக்கள் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டார்.

முதற்கட்ட விசாரணையில், “மதுபோதையில் வந்த சில மர்ம நபர்கள், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, மிகவும் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்தது” தெரிய வந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக அங்குக் கிடந்த பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, மோப்ப நாய் மற்றும் கை ரேகை நிபுணர்கள் அங்க வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டன. இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த கொலைக்கான காரணங்கள் மற்றும் கொலைக் குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணை மதுபோதையில் வந்த சில மர்ம நபர்கள், பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே, அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.