தண்ணீரில் மூழ்கிய இளைஞர்களைக் காப்பாற்றுவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் தாங்கள் மானத்தையும் பொருட்படுத்தாமல், தாங்கள் அணிந்திருந்த புடவையைத் தூக்கி வீச அந்த இளைஞர்களைக் காப்பாற்றிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகிய 4 இளைஞர்களும், அந்த பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். 

நண்பர்கள் 4 பேரில் 2 பேர் மட்டுமே ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு இருந்த ஆற்றுப் பள்ளத்தில் அவர்கள் எதிர் பாரதவிதமாக இறங்கிய நிலையில், அதில் சிக்கிக்கொண்டனர். இதனால், அவர்கள் 2 பேரும் ஆற்றில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அந்த ஆற்றின் மேலே நின்ற மற்ற 2 நண்பர்களும், இதனைப் பார்த்து கடம் பீதியடைந்தனர். அத்துடன், அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்ட அவர்கள் 2 பேரும், ஆற்றில் சிக்கி உள்ள 2 நண்பர்களையும் காப்பாற்ற ஆற்றில் குதித்து உள்ளனர். ஆனால், அவர்களால் தன் நண்பர்களைக் காப்பாற்ற முடியாமல், தவித்துக்கொண்டிருந்தனர். 

இதனால், 4 பேரும் ஆற்றுத் தண்ணீரில் போராடிக்கொண்டு இருந்தனர். மேலும், அவர்கள் 4 பேரும் சேர்த்து, தங்களைக் காப்பாற்றச் சொல்லி, அங்கு கூச்சலிட்டு சத்தமாம் போட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த ஆற்றுப் பகுதியில் சற்று தொலைவில் செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி, முத்தம்மாள் ஆகிய 3 பெண்களும் அங்கு துணிகளைத் துவைத்துக்கொண்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்துக் காப்பாற்றச் சொல்லி 4 இளைஞர்களும் சத்தம் போட்டதால், கதறியடித்துக்கொண்டு, ஓடி வந்த அந்த 3 பெண்களும், அக்கம் பக்கத்தில் உதவி செய்ய ஆண்கள் யாரும் இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்து கூப்பிட்டுள்ளனர். ஆனால், அங்க கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமே இல்லை.

இதனையடுத்து, சூதனமாக யோசித்த அந்த 3 பெண்களும், தங்களுடைய மானத்தைப் பற்றிக்கூடக் கவலைப் படாமல், தாங்கள் அணிந்திருந்த புடவையைக் கழற்றி, ஆற்றில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இளைஞர்களை நோக்கித் தூக்கி வீசி உள்ளனர். இதில், புடவை பிடித்துக்கொண்ட இளைஞரை,  3 பெண்களும் சேர்ந்து தங்கள் பலத்தைக் கொண்டு, காப்பாற்றினர். இதில், 2 பெண்கள் தண்ணீரில் சிக்கி உள்ள இளைஞரை இழுக்க, அந்த பெண்களையும், அவர்களுக்குப் பின்னாள் நின்றிருந்த பெண் தன் பலத்தைக் கொண்டு இழுத்துப் பிடித்துக்கொண்டார். 

இப்படியாக, 4 இளைஞர்களில் 2 பேர் புடவையைப் பிடித்துக்கொண்டு மேலே கரை ஏறினர். இப்படியே, அந்த பெண்களும் தங்கள் பலத்தைக்கொண்டு காப்பாற்றி 
உள்ளனர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக மற்ற 2 இளைஞர்களையும் அந்த பெண்களால் மீட்க முடியவில்லை. இதனால், ஆற்று தண்ணீரில் சிக்கித் தவித்த பவித்திரன், ரஞ்சித் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இது பற்றி பேசிய 2 பேரை காப்பாற்றிய முத்தம்மாள், “ஆழமான பகுதிக்குச் செல்லாதீர்கள் என நாங்கள் முன்பே அந்த இளைஞர்களை எச்சரித்திருந்தோம். ஆனாலும், அந்த இளைஞர்கள் அதை கேட்காமல் ஆற்றில் இறங்கிச் சிக்கிக் கொண்டனர். 

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு செய்வதறியாது திகைத்த நாங்கள் 3 பெண்கள் சேர்ந்து, வேறு வழி இன்றி நாங்கள் அணிந்திருந்த சேலைகளை வீச, அதனைப் பிடித்துக் கொண்டு 2 பேரை கரையேறிக் காப்பாற்றினோம். 

ஆனாலும், நாங்கள் காப்பாற்றுவதற்குள் மற்ற 2 இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனால், எங்களுக்கு மிகப் பெரிய வருத்தமாக, எங்கள் மனது எங்களை உறுத்துகிறது. அத்துடன், அந்த 2 இளைஞர்களும் எங்கள் கண் எதிரியிலேயே உயிர் இழந்தது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது” என்றும், அவர் கூறினார்.