“கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும்” என்று, சென்னை மாநகராட்சி அறிவுரை வழங்கி உள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2 வது அலையாக மிக தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூறியுள்ள கருத்தில், “கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்றும், 2 மணி முதல் 4 மணி நேரம் இடைவெளியுடன் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை குப்புறப்படுக்கலாம்” என்றும், குறிப்பிட்டு உள்ளது.

“கடின உடல் உழைப்பைத் தவிர்த்து, வீட்டில் தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மருத்துவர்கள் பரிந்துரைப்படி ivermectin, Azithromycin, ranitidine மாத்திரைகளை உட்கொள்ளலாம்” என்றும், சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

அத்துடன், “ivermectin மாத்திரையை 12 மி.கி. ஒரு முறை என்ற அளவில் 3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும், சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. 

“3 நாள் அஜித்ரோமைசின் மாத்திரை 500 மி.கி. என்கிற அளவில், 5 நாள் வைட்டமின் சி 500 மி.கி. அளவில் உட்கொள்ள வேண்டும் என்றும், அதுவும் மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் எடுத்துக்கொள்ளலாம்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

“5 நாள் ஜின்க் 50 மி.கி. என்கிற அளவில், 5 நாள் ranitidine மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பாரசிட்டமால் 500 மி.கி. மாத்திரைகளை ஒரு நாளைக்கு 4 முறை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும், ஆலோசனை கூறியுள்ளது.

“கொரோனா அறிகுறி உள்ளவர்கள் போதிய நீர்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்” என்றும், சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

“இணை நோய்கள் இருந்தால், அதற்கான மாத்திரைகள் மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் தொடர்ந்து எடுக்க வேண்டும்” என்றும், வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

மிக முக்கியமாக, “தொடர்ச்சியான காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால், மருத்துவமனை செல்ல வேண்டும்” என்றும், சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக, “கொரோனா தொடர்பான உதவிகளைப் பெற, 044 25619263, 25384520, 46122300 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்” என்றும். சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.