தூத்துக்குடியில் கல்யாணமே நடக்காமலேயே தேவாலயத்தின் திருமண சான்றிதழ் காட்டி, கல்லூரி இளம் பெண்ணை “தன்னுடன் சேர்ந்து வாழும் படி” மிரட்டி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தான், இப்படி வித்தியாசமான மிரட்டலுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 22 வயது இளம் பெண், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில், “நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே, எங்கள் பகுதியைச் சேர்ந்த டார்வின் என்ற இளைஞர் எனக்கு அறிமுகம் ஆனார்” என்று குறிப்பிட்டு உள்ளார். 

மேலும், “எங்கள் அறிமுகத்திற்குப் பிறகு, அந்த இளைஞர் என்னை ஒரு தலையாகக் காதலித்து வந்தார். ஆனால், இது தெரிந்து நான் சற்று ஒதுங்கியே இருந்தேன். அதன் தொடர்ச்சியாக, நான் 12 ஆம் வகுப்பு படித்து முடித்ததும், கோவையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் படிப்பதற்காக, அங்கு சேர்ந்தேன் என்றும், ஆனால் தற்போது டார்வின் “என்னுடன் சேர்ந்த வாழுமாறு என்னைக் கட்டாயப்படுத்தி, மிரட்டி வருகிறார்” என்றும், அந்த மனுவில் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “கடந்த 8. 8. 2017 ஆம் அண்டு, டார்வினுக்கும் எனக்கும் தூத்துக்குடி லூர்தம்மாள் ஆலயத்தில் முறைப்படி திருமணம் நடைபெற்றதாக கீழுர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து, சான்றிதழ் பெற்றிருப்பதாகவும், அதிர்ச்சி தகவல் ஒன்றையும், அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்த தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தகவல் பெற்ற போது, “போலி ஆவணங்களைப் பயன்படுத்தி லூர்தம்மாள் ஆலயத்தில் எனக்கும், அவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது” என்றும், அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். அந்த மனுவில், ஆவணங்களுடன் ஆலய பங்குத் தந்தையின் சான்றிதழும் இணைக்கப்பட்டிருந்தது. 

அது குறித்து பங்கு தந்தையிடம் விசாரித்த போது, “சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும் தினத்தில் ஆலயத்தில் அப்படியொரு திருமணம் நடைபெற வில்லை என்பது தெரிய வந்தது. 

அத்துடன், “இது போன்ற ஒரு சான்றிதழைத் தான் வழங்கவில்லை என்றும், அந்த பங்கு தந்தை கூறியிருக்கிறார். 

இதனால், “போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி, அந்த இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதாக டார்வின் பதிவு செய்தது தெரிய வந்தது.

அதே போல், “திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படும் அந்த நாளில் நான் தூத்துக்குடியில் இல்லை என்றும், கல்லூரியில் செய்முறை தேர்வில் பங்கேற்றேன்” என்றும், அந்த இளம் பெண் குறிப்பிட்டு உள்ளார். அதற்கான ஆன்லைன் வருகை பதிவேடு உள்ளது என்றும், அதனையும் இணைத்து, அவர் மனுவில் தாக்கல் செய்திருந்தார். 

எனினும், “போலி திருமணப் பதிவு அடிப்படையில் என்னுடன் வந்து சேர்ந்து வாழும் படி, டார்வின் கடந்த ஜனவரி மாதம் முதல், என்னைத் தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார் என்றும், இதனால் கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்ய மாவட்ட பதிவாளரிடம் மனு அளித்தேன் என்றும், ஆனால் அவர் என் மனுவை நிராகரித்து விட்டார்” என்றும், பாதிக்கப்பட்ட இளம் பெண் குற்றம் சாட்டி உள்ளார்.

இதனால், “கீழுர் சார்பதிவாளர் வழங்கிய திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்றும், அந்த பெண் நீதிமன்றத்தை நாடி, மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், “மனு தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட பதிவாளர், கீழுர் சார்பதிவாளர் மற்றும் ஒரு தலை காதலன் டார்வின், புனித சேவியர் ஆலய பங்குத்தந்தை பிராங்கிளின் ஆகியோர் வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” என்றும், நீதிபதி உத்தரவிட்டார். இதனால், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனுவை நிராகரித்த சார்பதிவாளர் அலுவலருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.