“காதலிக்க மறுத்தால் மதிப்பெண்ணை குறைத்துவிடுவேன்” என்று, மிரட்டியே 17 வயது பள்ளி மாணவியை, ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் ஆசிரியர் ஒருவர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி இருக்கிறார்.

திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 

இந்த மாணவி, அந்த பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்த போது, அந்த பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 31 வயதான வெங்கடேசன் என்பவர், அந்த மாணவியைத் தனது வசிகரத்தால் இழுக்க முயன்று உள்ளார்.

ஆனால், அந்த மாணவி இந்த ஆசிரியரின் செயல்பாடுகள் எல்லாம் தெரிந்து, விலகி விலகிச் செல்ல முயன்று உள்ளார். அத்துடன், அந்த மாணவி, 9 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து, அந்த ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.

மேலும், “என்னை நீ காதலிக்க வேண்டும்” என்றும், அந்த மாணவியை, அந்த ஆசிரியர் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால், அந்த மாணவியோ அந்த ஆசிரியரைப் பார்த்து சற்று பயந்தாலும், விடாப்பிடியாகக் காதலிக்காமல் இருந்து வந்துள்ளார். 

இதனால், கடும் கோபம் அடைந்த அந்த ஆசிரியர், “என்னை காதலிக்க மறுத்தால், தேர்வில் உனது மதிப்பெண்ணைக் குறைத்துவிடுவேன்” என்று, மிரட்டி உள்ளார். 

ஒரு கட்டத்தில், மிரட்டியே அந்த மாணவியை தனது வலையில் அந்த  ஆசிரியர்  வீழ்த்தியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த ஆசிரியரின் நடவடிக்கை பிடிக்காமல், அந்த பள்ளி நிர்வாகம் ஆசிரியர் வெங்கடேசனை திடீரென பணி நீக்கம் செய்து உள்ளது. 

பள்ளியை விட்டு அந்த ஆசிரியர் சென்றாலும், அந்த 17 வயது மாணவியிடம் தொடர்ந்து அவர் செல்போனில் பேசி வந்திருக்கிறார்.

குறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சூழலை தெரிந்துகொண்டு, அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்த அந்த ஆசிரியர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மேலும், இதனை வெளியே யாரிடமும் கூற கூடாது என்றும், அவர் மிரட்டி உள்ளார்.

ஆனால், அந்த 17 வயது மாணவி தற்போது, 6 மாத கர்ப்பமாகி உள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், அந்த மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து தனது பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஆசிரியர் வெங்கடேசன் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவிக்கு தொடர்ந்து 2 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

குறிப்பாக, “கைதான ஆசிரியர் வெங்கடேசன், பள்ளியில் பணியாற்றிய காலத்தில், வேறு யாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாரா?” என்ற கோணத்திலும் போலீசார் தங்களது விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.