சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் வி.சாந்தா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், மருத்துவர் சாந்தாவுக்கு பாரத்ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

இதை குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’ சென்னை - அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும்,  உலக சுகாதார நிறுவனத்தின்‌ சுகாதார ஆலோசனைக்‌ குழு உறுப்பினருமான மருத்துவர்‌ சாந்தா அம்மையார்‌(93) அவர்களின்‌ மறைவு மிகுந்த கவலையளிக்கிறது. தன்னலமில்லா மக்கள்‌ தொண்டராக மருத்துவத்துறையில்‌ அவர்‌ ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.

இந்திய அரசின்‌ உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண்‌, பத்மவிபூஷண்‌ ஆகிய விருதுகளைப்‌ பெற்ற பெருமைக்குரிய சாந்தா அம்மையார்‌ தனது இறுதிமூச்சு வரையில்‌ புற்றுநோயிலிருந்து மக்களைக்‌ காக்கும்‌ பணிக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்துக்‌ கொண்டவர்‌.

மருத்துவர்‌ முத்துலட்சுமிரெட்டி அம்மையார்‌ தொடங்கிய அடையாறு புற்றுநோய்‌ ஆராய்ச்சிமையத்தை இன்று உலகப்‌ புகழ்பெற்ற மருத்துவமனையாக உயர்த்தி மாபெரும்‌ சாதனையைப்‌ படைத்தவர்‌. எண்ணற்ற உயிர்களைக்‌ காப்பாற்றியவர்‌.


அவருடைய மறைவு மருத்துவ உலகுக்கு மட்டுமின்றி அனைத்துத்‌ தரப்பினருக்குமான மாபெரும்‌ இழப்பாகும்‌.

அவரது ஈடு இணையற்ற ஈகத்தையும்‌ மருத்துவப்‌ பங்களிப்பையும்‌ போற்றும்‌ வகையில்‌ அரசு மரியாதையுடன்‌ அவரை நல்லடக்கம்‌ செய்ய வேண்டுமெனவும்‌ இந்திய உயரிய விருதான “பாரத்ரத்னா' விருதினை வழங்கிச்‌ சிறப்பிக்க வேண்டுமெனவும்‌ விசிக சார்பில்‌ வலியுறுத்துகிறோம்‌.


அவரை இழந்துவாடும்‌ யாவருக்கும்‌ எமது ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.” என்றுள்ளார்.