மனுஸ்மிருதி என்ற ஆயுதத்தை விசிக தலைவர் திருமாவளவன் பயன்படுத்துவதின் அரசியல் பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம்.

இந்து மதப் பெண்களை மனுஸ்மிருதி -இழிவுபடுத்துகிறது.. அதைக் கொளுத்து வோம்!” என்று போராட்டம் நடத்தியிருக்கிறார் வி.சி.க. தலைவர் திருமாவளவன். - “இது தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் என்னை பிளாக்மெயில் செய்கிறார்!' என்று கொந்தளித்துவிட்டார்!” என்கின்றனர், தி.மு.க. உள்வட்டம் அறிந்த நபர்கள்.

சரி.. அப்படி என்னதான் இவர்களுக்குப் பிரச்சனை. திமுக – விசிக உறவில் பிரச்சனை என்பது மனுஸ்மிருதியால் ஏற்பட்டது இல்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே முட்டல் மோதல் ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் திமுக தரப்பில் வி.சி.கவிற்கு ஒரு தொகுதி தருவோம் என்று சொல்லி, பின்னர் தேமுதிக கூட்டணியில் இடம்பெறாத நிலையில் வி.சி.கவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதிலும், திமுக தலைவர் ஸ்டாலின் போட்ட கண்டிஷன் என்னவென்றால் 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும், அப்படி போட்டியிட்டால் தான் தேர்தல் நிதி திமுக தரப்பிலிருந்து வழங்கப் படும் என்பதாகும்.

ஒரு பக்கம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திருமா தயங்கினாலும் தேர்தல் நிதி என்பது சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் விசிக நிர்வாகிகளோ இதனால் மனமுடைந்துப் போனார்கள். என்ன தலைவரே இப்படி திமுக உறுப்பினராகித்தான் நாம் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்று குமுறினர். துவண்டுபோயிருந்த திருமாவிற்கு தெம்பூட்டினார் அவரது நண்பர் ஒருவர். நான் பணம் தருகிறேன், நீங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று சொன்னப்பிறகே விசிக சார்பில் தனிச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதையே ஸ்டாலின் விரும்பவில்லை. இந்த புகைச்சல் அடங்குவதற்குள்தான் இப்போது பா.ம.கவிற்கு துரைமுருகன் மூலம் தூதுவிட்டுருக்கிறது திமுக தரப்பு. இதை அறிந்த திருமாவளவன் கொதித்துப் போய்விட்டார்.

பா.ம.க இருக்குமிடத்தில் விசிக இருக்காது என்று தொல் திருமாவளவன் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதுகுறித்து தனது டெல்லி நண்பரும் திமுக குடம்பத்திற்கும் வேண்டியவர் மூலம் கூட்டணி தர்மம் குறித்துப் பேச சொல்லியிருக்கிறார், திமுக தரப்போ தேர்தல் என்றால் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்திஅ நடக்கதான் செய்யும் என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

ஒருபுரம் இப்படி இருக்க , சமீபத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனோ “ தேர்தல் நெருக்கத்தில்தான் எவன் நம்ம கூட்டணில இருக்கான் , எவன் வெளீலப் போவாண்ணு” சொல்லவும் திருமா உச்சக்கட்ட விரக்திக்கு ஆளாகிவிட்டார். அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்வில் நிருபர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு கூட்டணி குறித்து இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை என்று ஒரு பகீர் தகவலையும் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் , சட்டமன்றத் தேர்தலிலும் 4 சீட்டுகள்தான் ஒதுக்கப்படும், அதிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திருமாவிற்கு செய்தி ஒலை அனுப்பப்பட்டிருக்கிறது. இப்படியே இவர்கள் நக்கல் செய்கிறார்கள் என்பதால்தான் சமீபத்திய தனியார் தொலைகாட்சி பேட்டியில் கூட எனக்கு கொள்கைதான் முக்கியம் எம்.பி. பதவியெல்லாம் நாளைக்கே ராஜினாமா பண்ணிடுவேண்ணு ஆவேசப்படிருக்கிறார் திருமா.

இந்த மாதிரி தொடர்ச்சியான சம்பவங்களுக்குப்பிறகுதான் இனிமேல் திமுகவிடம் அடங்கிப்போவதில்லை சீறிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார் திருமா.

என்ன செய்யலாம் என்று ஆலோசித்தப்போதுதான் விசிகவின் மூத்த நிர்வாகி ஒருவர் தலைவரே திமுகவின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான முரசொலி நாளேடு இருப்பது பஞ்சமி நிலம் என்ற சர்ச்சை உள்ளது., அதனால் இந்த பிரச்சனையை கையிலெடுப்போம் என்று ஐடியா கொடுக்க., திருமாவும் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பஞ்சமி நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொளுத்திப்போட்டார்.

திமுக தரப்பிலிருந்து மெளனம் காக்கப்பட்டது. கொளுத்திப்போட்ட நெருப்பு தண்ணி ஊற்றாமலேயே அணைந்துவிட்டது. சரி என்னடா இப்படி ஆகிடிச்சே என்று கவலையோடு இருந்த திருமாவின் அடுத்த அஸ்திரம்தான் “மனுஸ்மிருதி”.

பெரியார் வலைக்காட்சிக்கு திருமா அளித்தப் பேட்டியில் “ மனுஸ்மிருதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வாசகங்கள் இருக்கின்றன!” என்று தெரிவிக்க , இதற்கு பாஜக மற்றும் பல இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இப்போதுதான் திருமா ஒரு கணக்குப் போட்டார்.

“திமுக என்பது பகுத்தறிவு , சமூகநீதி, பெண்ணுரிமை என்றெல்லாம் பேசும் கட்சி.,முற்போக்காளர்கள் என்று பொதுவெளியில் காட்டிக்கொள்ளும் கட்சி , அதனால் மனுஸ்மிருதியை எரித்துப் போராட்டம் நடத்தலாம், இப்படி இருக்கும்போது திமுக நம்மை கூட்டணியைவிட்டு கழ்ற்றிவிட்டால் “ முற்போக்குக் கட்சியை கூட்டணியிலிருந்து நீக்கலாமா என்ற கேள்வி வரும்.

ஆகவே தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் அந்த ரிஸ்கை எடுக்க மாட்டார் என்று திருமா ஒரு கணக்குப் போட்டார்.

திட்டமிட்டப் படியே மனுஸ்மிருதி எரிப்புப் போராட்டம் நடத்தினார். திமுகவிற்கு ஆலவட்டம் வீசும் திக, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் திருமாவிற்கு ஆதரவுக் கரம் நீட்டியது.

இதற்கு பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளரான அஸ்வத்தாமன் ,திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து திருமா மீது  6 பிரிவுகளின் கீழு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐ-பேக் நிறுவனம் தனது ஊழியர்களைக் கொண்டு கடந்த 26ம் தேதி தமிழக மக்களின் பல்ஸ் பார்த்திருக்கிறது. அலைபேசி மூலம், ரேண்டமாக எண்களைத் தேர்ந்தெடுத்து மக்களை தொடர்புக் கொண்டிருக்கிறார்கள்., தாங்கள் கல்லூரி மாணவர்கள் என்றும் ஒரு ஆய்வுக்காக பேசுவாதாகவும் கூறி, திருமா விவகாரம் குறித்துக் கேட்டிருக்கிறார்கள், மக்களிடம் இருந்து வந்த பதில்கள் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சித் தரும் வகையில் இல்லை.

இது மட்டுமில்லாமல் திருமா மீது வழக்கு பதியப்பட்டவுடன், தி.க , திவிக, சி.பி.எம். தரப்பில் உடனடியாக கண்டன அறிக்கை வெளியானது ஆனால் திமுக தரப்பிலிருந்து அமைதி காக்கப்பட்டது.

திமுக மூத்த நிர்வாகிகளோ தலைவரே கூட்டணிக் கட்சிகளெல்லாம் கண்டனம் தெரிவித்துவ்ட்டார்கள் நாமும் தெரிவிக்கவில்லையென்றால் நம் பிளான் வெட்டவெளிச்சமாகிவிடும் அதனால் ஒரு கண்டனத்தை தட்டி விடுவோம் என்று சொல்லவே – கண்டன அறிக்கை வெளியானது.

அந்த அறிக்கையில் திருமாவிற்கு ஆதரவான கருத்து இருந்ததை விட அவருக்கு எரிச்சல் ஊட்டும் கருத்துதான் இடம் பெற்றது. அது என்னவென்றால் பெண் விடுதலைக்காக அதிகம் பாடுப்பட்டது திமுகதான் என்பவை போன்ற இன்னும் சில வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.

இரு தலைவர்களும் கோபத்தின் உச்சியில்தான் இருக்கிறார்கள். திமுக தலைவரோ திருமாவளவன் என்னை சீண்டிப் பார்க்கிறார், இதெல்லாம் சரியில்லை என்று சொல்லி வையுங்கள் என்று வடமாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார். அதே நேரம் , தனது கோபத்தை மறைமுகமாகவும் ஐ.டி.விங் மூலம் தெரிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஐ.டி.விங்கில் தீவிரமாக செயல்படும் புதுக்கோட்டை அப்துல்லா , “திமுகவையும் திமுக தலைவரையும் வரைமுரையற்ற வார்த்தைகளால் விமர்சிப்பதையே தொழிலாக வைத்திருக்கும் பேக் ஐடிக்கு விசிக தலைவர் திருமா தனது அதிகாரப்பூர்வமான ஐடியின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் அந்த பேக் ஐடியில் எழுதுவதெல்லாம் அண்ணன் திருமா அவர்களுக்கு தெரிந்துதான் நடக்கிறது என்றோ, இதில் அவருக்கு ஒப்புதலும் சம்மதமும் உண்டா என்றெல்லாம் “முட்டாள்தனமாக” நாங்கள் கேட்கமாட்டோம் என்று வாழைபழத்தில் ஊசி ஏற்றுவதுப் போல் திருமாவை குத்திவிட்டார்.

எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் , ஐபேக் நிறுவனமோ இப்படியே திருமா பேசிக்கொண்டிருந்தால் , நமக்கு கிடைக்க வேண்டிய இந்துக்களின் வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும் என்று ஸ்டாலினை பதரவைத்திருக்கிறது.

இவை அனைத்தையும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக தலைவர் ,சற்று மனுஸ்மிருதி விவகாரம் அடங்கட்டும், வேறு காரணங்களை சொல்லி விசிகவை கழற்றிவிடலாம் என்று சிந்திப்பதாக தகவல்கள் வருகின்றது.

விசிக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா., அல்லது கூட்டணியைவிட்டு வெளியேறுகிறதா என்பது அண்ணன் திருமா அவர்கள் எடுக்கும் அடுத்த வியூகத்திலிருந்துதான் தெரியவரும்…

எழுத்து - அஜெய் வேலு