மனைவியின் கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனை கொன்று கிணற்றில் வீசி விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்த காமாட்சிபுரம் பகுதியில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த சமையல் தொழிலாளியான 42 வயதான முத்துக்காளை, தனது மனைவி கலையரசி உடன் வசித்து வந்தார். 

முத்துக்காளை - கலையரசி தம்பதிக்கு 14 வயதில் கிஷோர்குமார் மற்றும் 10 வயதில் ஹரீஷ்குமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவர் முத்துக்காளை சமையல் வேலைக்கு கேரளாவுக்கு சென்று விட்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஊர் திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால், வீட்டல் இருந்த அவருடைய மனைவி கலையரசி, அங்குள்ள மேலப்பட்டியை சேர்ந்த 37 வயதான சேதுபதி என்பவருடன் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். 

அப்போது, சேதுபதிக்கும் கலையரசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம், நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படியாக சில காலம் அவர்களது உல்லாச வாழ்க்கை திருட்டுத் தனமாக சென்றுக்காண்டு இருந்து உள்ளது.

இந்த கள்ளக் காதல் விசயம், எப்படியோ கலையரசியின் கணவர் முத்துக்காளைக்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கணவன் முத்துக்காளை, தன் மனைவி அழைத்து கண்டித்து உள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதில், கணவனிடம் சண்டைப் போட்டுக்காண்டு போகத்துடன் வீரபாண்டி அருகே உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு கலையரசி சென்று தங்கி உள்ளார்.

பெற்றோர் வீட்டில் சில நாட்கள் அவர் தங்கி உள்ளார். ஆனால், அங்கே இருந்த படியும், கலையரசி தனது கள்ளக் காதலன் சேதுபதி உடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுவும் முத்துக்களைக்கு தெரிய வந்தது. இதனால், கணவன் முத்துக்களை தன் மனைவியை மீண்டும் கண்டித்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி கலையரசி, கள்ளக் காதலன் சேதுபதியுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்.

அதன்படி, கணவனுடன் கடந்த 4 ஆம் தேதி மேலப்பட்டிக்கு செல்வோம் என்று கூறி, அவரது மனைவி கலையரசி, கணவனை அழைத்து சென்று உள்ளார். அப்போது, செல்லும் வழியில் அங்கள்ள காமாட்சிபுரம் அருகே உள்ள தனியார் தோட்ட கிணற்று பகுதியில் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கணவனிடம் கூறிவிட்டு, அங்கு சென்று மறைந்துகொண்டார். 

அப்போது, அந்த பகுதியில் ஏற்கனவே சேதுபதியும், அவருடைய நண்பர் கணேசனும் அங்கு மறைந்து காத்திருந்த நிலையில், அவர்கள் முத்துக்காளையை கடுமையாக தாக்கி, தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அதன் பிறகு, கலையரசி, கள்ளக் காதலன் சேதுபதி, அவரது நண்பன் என 3 பேரும் சேர்ந்து, முத்துக்களையின் உடலை, அதே பகுதியில் உள்ள கிணற்றில் வீசி விட்டு வீடு திரும்பி உள்ளனர். அதன் பின்னர், கலையரசி அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். 

ஆனால், முத்துக்காளையின் அண்ணன் ஈஸ்வரன் கலையரசியிடம் கணவரை பற்றி கேட்டு உள்ளார். ஆனால், “அவரை காணவில்லை” என்று கூறி, கலையரசி நாடகம் ஆடி உள்ளார். 

அதே நேரத்தில், வீரபாண்டியை அடுத்த உள்ள காமாட்சிபுரம் அருகே உள்ள தனியார் தோட்ட கிணற்றில், 50 வயது உடைய ஆண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முத்துக்காளையின் மனைவி கலையரசியிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதில், போலீசாருக்கு சந்தேகம் வரவே, போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் தனது கணவரை, கட்டிடத்தொழிலாளி மற்றும் அவருடைய கூட்டாளியுடன் சேர்ந்து கலையரசி கொலை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த சம்பவம், அந்த பகுதியில், கடும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.