தேனி அருகே காதல் திருமணம் செய்த மகள் மீது கொலை வெறியில் இருந்த தந்தை, உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்து உள்ள வேப்பம்பட்டையை சேர்ந்த ஜெயபால் - செல்வி தம்பதியர். இந்த தம்பதியினர், குடும்பத்துடன் பெங்களூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில், மகள் கீர்த்தனாவின் திருமணம் விசயமாக மாப்பிள்ளைப் பார்த்து திருமணம் செய்து வைப்பதற்காக, இந்த ஊரடங்கு காலத்தைக் காரணமாக வைத்து, சொந்த ஊரான தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டி கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்து உள்ளனர்.

அதன்படி, ஊருக்கு வந்த பிறகு, தனது மகள் கீர்த்தனாவிற்குத் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்த ஒருவரை மாப்பிள்ளையாகத் தேர்வு செய்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்து உள்ளனர்.

திருமண நாள் நெருங்க நெருங்கத் திருமணத்திற்காகப் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு, நகை மற்றும் பொருட்கள் அனைத்தும் வாங்கி வைக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் அனைத்தும் தடபுடலாக நடைபெற்று வந்துள்ளன. 

அதன்படி, கடந்த 2 ஆம் தேதி புதன் கிழமை அன்று திருமணம் நடத்துவதற்காக ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்களும் கொடுக்கப்பட்டு இருந்தன.

ஆனால், திருமணத்திற்கு 5 நாட்கள் முன்பு அதாவது கடந்த 29 ஆம் தேதி இரவு நேரத்தில், வீட்டிற்குப் பால் வாங்கி வருவதாகக் கூறி விட்டு, வீட்டை விட்டு வெளியே வந்த கீர்த்தனா, அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 

மகள் கீர்த்தனா, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையே என்று, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், அந்த பகுதியில் விசாரித்து உள்ளனர். அப்போது, கீர்த்தனா ஒரு இளைஞருடன் இரு சக்கர வானத்தில் சென்றதாக அப்பகுதி மக்கள் சிலர் கூறி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கீர்த்தனாவின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, மகள் மாயமானது தொடர்பாகப் புகார் அளித்தனர். 

இது வழக்குப் பதிவு செய்த போலீசார், வீட்டை விட்டு வெளியேறிய கீர்த்தனாவையும், கீர்த்தனாவை அழைத்துச் சென்ற இளைஞர் பற்றியும் விசாரித்து உள்ளனர். 

விசாரணையில், கீர்த்தனா அந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால், இன்னும் ஆவேசமடைந்த கீர்த்தனாவின் தந்தை ஜெயபால், “அவள் இனி என் மகளே இல்லை” என்று ஆவேசமாகப் பேசி சத்தம் போட்டுள்ளார்.

அத்துடன், மகள் மீதான கொலை வெறியின் உச்சபட்சமாக, “என் மகள் இறந்து விட்டார்” என்று, சொந்த ஊரில் தன் மகள் கீர்த்தனாவிற்குக் கண்ணீர் அஞ்சலி 

போஸ்டர் ஒட்டி உள்ளார். இதனால், அவரின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து கீர்த்தனாவின் தந்தையிடம் சத்தம் போட்டதாகத் தெரிகிறது. ஆனாலும், அவர் மனம் மாறாமல், கடும் கோபத்துடன்,  “அவள் இனி என் மகளே இல்லை” என்று ஆவேசமாகப் பேசினார்.

இதனிடையே, மகள் உயிருடன் இருக்கும் போதே, வேறு ஒருவரைக் காதல் திருமணம் செய்துகொண்டதால், பெற்ற தந்தையே மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டிய சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.