தமிழகம் முழுவதும் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள், பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், அதன் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு தற்போதும் நீட்டிக்கப்பட்டு புதிய தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை செப்டம்பர் 6 ஆம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுடன் ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

அதன் படி, ஏறக்குறைய 4 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தின் சில பகுதிகளில் ஒரு சில தியேட்டர்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

அத்துடன், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே தியேட்டர்களில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், தியேட்டரக்ளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. 

இதையொட்டி, தியேட்டர்களில் நேற்று இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகள் கடந்த 2 நாட்களாக படு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஒரு சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன.

அப்படி திறக்கப்பட்ட தியேட்டர்களில், ஏற்கனவே திரையிடப்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. 

அத்துடன், இந்த ஊரடங்கு நேரத்தில் OTT யில் வெளியான படங்கள் இந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று தியேட்டர்களில் வெளியிடப்படலாம் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், தியேட்டர்கள் திறப்பதால் திரைக்கு வராமல் முடங்கி உள்ள 40 க்கும் மேற்பட்ட புதிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர காத்திருக்கின்றன.

அதே போல், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதானல், காலை முதலே மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டன. 

இது வரை, கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கடற்கரைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன.

குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில். தற்போது அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இதனிடையே, கடந்த 4 மாத காலத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதால், சினிமா ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். அதே போல், தமிழகத்தில் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதால், பொது மக்களும் அதிக அளவில் அங்கு சென்று இளைப்பாறி வருகின்றனர்.