தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்று அதை மருத்துவமனை கழிவறையில் வீசி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அத்திப்பேடு பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை பக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 3-ம் தேதி மாலை 6 மணி அளவில் கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆண பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்ததை மருத்துவமனை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் இதனைப்பற்றி தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அதன் பின்னர் போலீசார் தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள், ஊழியர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள் ஆஸ்பத்திரியில் பிரசவம் ஏதும் நடைபெறவில்லை, யாரோ இந்த பெண் பச்சிளம் குழந்தையை வைத்து விட்டு சென்று உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதனைத்தொடர்ந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதற்கு முந்தைய தினம் இரவு 10.30 மணியளவில் கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்ததும் பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் சர்வ சாதாரணமாக வெளியே நடந்து சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண் குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பெண்  சாய்ரா பானு என்பது தெரியவந்தது. 33 வயதான அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது அவரின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததும், லாரி டிரைவர் ஒருவருடன் தகாத உறவில் இருந்த போது குழந்தை உருவானதும் தெரியவந்துள்ளது.

மேலும் கர்ப்பமான சாய்ரா பானுவுக்கு கடந்த 2-ம் தேதி பிரசவ வலி வந்த நிலையில் அவர் மற்றொரு பெண்ணின் துணையோடு மருத்துவமனைக்கு வந்துள்ளார். வயிற்றுவலி என கூறி மருத்துவமனைக்கு வந்த சாய்ரா பானு நேராக கழிவறைக்கு சென்று அங்கு தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் பெற்ற குழந்தையை கழிவறையின் சுவற்றின் மீது வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில், இதனிடையே இரவு முழுவதும் பசியால் துடித்த அந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. குழந்தையை கொலை செய்த சாய்ரா பானுவை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர்.