“கொரோனா 3 ஆம் அலையில், 2 ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும்” என்று, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது 2.5 லட்சத்தை நெருங்கி வருவது. இதனால், இந்தியால் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது, 4.85 லட்சத்தை தாண்டி உள்ளது. 

அதே போல், கொரோனா பாதிப்பு 3.63 கோடியை தாண்டி பதிவாகி வருகிறது. எனினும், தொற்று குறைந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.

அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு, முன்பை விட தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தலைநகர் சென்னையில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையானது 521ஆக தற்போது அதிகரித்து உள்ளது. 

“குறிப்பிட்ட ஒரு தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டுது.

அந்த வகையில் பார்க்கும் போது, “சென்னையில் 2134 தெருக்களில் 3 முதல் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது” தெரிய வந்துள்ளது. 

இதனால், “கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக” சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

“கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் சூழலில், கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக” மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலைத் தெரிவித்து உள்ளது. 

இந்த சூழலில் தான், தமிழ்நாட்டில் நேற்று 17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், இன்று சற்று முன்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக காதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  “சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்” என்று, வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும், கொரோனா 3 ஆம் அலையானது, 2 ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாகவும்” எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், “பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 60 வயதுக்கு மேற்பட்டோர் தகுதியானவர்கள் என்றும், அப்படி தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது” என்றும், கூறினார். 

அத்துடன், “மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து 2 வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

“தமிழகத்தில் 93 லட்சம் பேர் 2 வது தவணை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள்” என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அவர் பூஸ்டர் டோஸ் கோவாக்சினை செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.