சில தினங்களுக்கு முன், தமது அரசியல் கட்சியை 2021 ஜனவரி மாதத்தில் தொடங்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் வழியாக அறிவித்தார். மேலும் கட்சி தொடங்கும் தேதி டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

இதுகுறித்து அவர் செய்த அந்த ட்வீட்டில் "வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்" என்று அச்சிடப்பட்ட ஒரு வாசகத்தையும் படம் எடுத்துப் பகிர்திருந்தார் ரஜினி. உடன், `மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம், இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல' என்ற இரண்டு ஹேஷ்டேக்குகளை தமது ட்வீட்டில் பயன்படுத்தியுள்ள ரஜினி கடைசியில் தமது படத்தின் மூலம் புகழ்பெற்ற பாபா முத்திரையைக் காட்டும் எமோஜியைப் போட்டு தமது ட்வீட்டை முடித்திருந்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு வெளிவந்த பிறகு, அவரது நெருங்கிய நண்பரும் துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சரியான முடிவை ரஜினி எடுத்துள்ளார். அவரது வசனப்படி இது - லேட்டு, ஆனால், லேட்டஸ்ட். வாழ்த்துகள் ரஜினி. 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகம் ஆன்மிக அரசியலாக மாறும்" என்று கூறி வரவேற்றார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "சிறந்த திரைப்பட நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை பெரிதும் வரவேற்கிறோம். அவரது (ரஜினியின்) வரவு நல்வரவு ஆகட்டும். வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நிகழலாம். வாய்ப்பிருந்தால் கூட்டணி அமையும்" என்று தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பால் மாநிலத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கான வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது. அவை எங்கும் செல்லப்போவதில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் ரஜினிக்கு மனபூர்வ வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். மேலும், `தமிழகத்தில் ஆன்மிகம் எடுப்படும். ஆனால் ஆன்மிக அரசியல் எடுபடாது. ரஜினியின் கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ரஜினியின், தேதி குறிப்பிடப்படாத - பெயர் சூட்டப்படாத கட்சியில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் ரஜினிகாந்த் தற்போது அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 5) இதுகுறித்து சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து ஆலோசானை முடிந்த பின்னர் தமிழருவி மணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“டிசம்பர் 31-ம் தேதி ரஜினிகாந்த் புதிய கட்சி குறித்து அறிவிப்பார். இன்றைய ஆலோசனையின் போது அடிப்படை செயல்திட்டங்கள் குறித்து விவாதித்தோம். முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையில் எதுவும் பேசவில்லை. கூட்டணி குறித்து கட்சி தொடங்கிய பிறகுதான் முடிவெடுக்கப்படும்.

ரஜினி கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும். ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மற்ற அரசியல் கட்சிகளை விமர்சித்து ரஜினிகாந்த் அரசியல் செய்யமாட்டார். ரஜினி கட்சியுடன் காந்திய மக்கள் இயக்கம் இணையும்.”

என்று கூறினார்.