“தலைவா வா.. தளபதியே வா..!” என்று, நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து, அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜயை, அவரது ரசிகர்கள் நீண்ட காலமாகவே அரசியலுக்கு வரும் படி அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக, கடந்த சில மாதங்களுக்கு 
முன்பு கூட நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் கூட, கட்சியை தொடங்குவதா அறிவித்து, “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்கிற பெயரையும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, “எனது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் பதிவு செய்திருக்கும் கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று, நடிகர் விஜய் அதிரடியாக அறிவித்தார். 

இது தொடர்பாக நடிகர் விஜய் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில், “என்னுடைய ரசிகர்கள் யாரும் அந்த அரசியல் கட்சியில் சேர வேண்டாம்” என்று, குறிப்பிடப்பட்டு இருந்தது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களிடம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வு, தமிழக தொலைக்காட்சிகளில் பெரும் விவாத பொருளாக மாறியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இத்தனை நாட்களாக அரசியல் கட்சி தொடங்கவதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், தான் “அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை” என்று கடந்த வாரம் திடீரென்று அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்த 2 நாட்களிலேயே “நடிகர் விஜயின் கையைப் ரஜினி பிடிப்பது போன்ற புகைப்படத்துடன்” விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி, நடிகர் விஜயை அரசியலுக்குப் போகும் படி ரஜினி கூறுவது போல் தமிழகத்தின் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

மதுரை தெற்கு மாவட்ட தொண்டரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட அந்த போஸ்டரில், “வேண்டாம் 2026 ல் இல்லைன்னா எப்பவுமே இல்லை 'நீங்க வாங்க தம்பி இனி' என தலைப்பிடப்பட்டுள்ளது. 'அதிசயமும் அற்புதமும் உங்களால் மட்டுமே சாத்தியம் ரஜினி சார் என்றும், உங்க லட்சியம் நிச்சயம் விஜயால் நிறைவேறும்' என்றும், அதில் எழுதப்பட்டு இருந்தது. இதற்கு முன்பு சீமானை கண்டித்து ஒரு போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனையடுத்து, விஜய் ரசிகர்கள் ஒட்டிய இந்த போஸ்டர் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான், தேனியில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

மேலும், நடிகர் விஜயின் பிறந்தநாள், புதிய படங்கள் வெளியாகும் நாட்களில் மட்டுமே விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமாக, அவரது போஸ்டர்கள் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் தான், தேனியில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதன் படி, விஜய் மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட தலைமை சார்பில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரில், நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. 

அதில், “யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் நீங்கள் வரவேண்டும் தலைவா. யாரை நம்பியும் நாம் இல்லை, மக்களைத் தவிர” என்கிற வாசகம் இடம் பெற்று இருந்தது.

அதே போல் மற்றொரு போஸ்டரில், “2021 புதிய வருடம், புதிய கட்சி மக்கள் இயக்கம், புதிய அரசியல், புதிய தலைவர், புதிய ஒருவனாகத் தளபதி, புதிய நம்பிக்கை. தமிழகத்திற்கு நீங்கள் எடுக்கும் முடிவே எங்களின் இறுதி முடிவு தலைவா” என்கிற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இது போன்ற பரபரப்பான வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள், தேனியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.