"தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டாம் என்றும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலுக்கு வர வேண்டும்" என்றும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், “அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைப் பதிவு செய்து, உறுப்பினர் நியமனம் செய்யத் தொடங்கினார்.

இந்த தகவல் நடிகர் விஜய்க்குத் தெரிய வரவே, கடும் அதிர்ச்சியடைந்த நடிகர் விஜய், “எனக்கும் அந்தக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று, அதிரடியாகத் தெரிவித்து, அறிக்கை ஒன்றையும் உடனடியாக வெளியிட்டார். இது, தமிழக அரசியலில் மட்டுமல்லாது, விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அத்துடன், “என் ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் சேர வேண்டாம்” என்றும், நடிகர் விஜய் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். இதன் காரணமாக, கட்சி தொடங்குவது தொடர்பான முடிவிலிருந்து சந்திரசேகர் பின் வாங்கினார். 

அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் மீண்டும் விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு மீண்டும் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார் என்றும், 

அதன்படி “அப்பா எஸ்.ஏ.சி.மக்கள் இயக்கம்” என்ற, புதிய கட்சி ஒன்றைப் பதிவு செய்துள்ளனர் என்றும், அது பொங்கல் பண்டிகையன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இதுவும், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில், “விஜய், அரசியலில் ஈடுபட்டு மக்கள் சேவையாற்ற வேண்டும் என ஒரு தந்தையாக நான் நினைக்கிறேன்” என்று, குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “என் மகன் விஜய் நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்டதை நான் நிறைவேற்றினேன்; விஜய் அரசியலில் ஈடுபட்டு மக்கள் சேவையாற்ற வேண்டும் என தந்தையாக நான் ஆசைப்படுகிறேன்” என்றும், அவர் கூறினார்.

“நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என்பதால் தான், இந்த கட்சியை நான் தொடங்கி உள்ளேன்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக, “தற்போது விஜய் அரசியலுக்கு வரவேண்டாம் என்றும், இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அரசியலுக்கு வர வேண்டும்” என்றும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டுக்கொண்டார். 

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள இந்த பேட்டி, இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.