தென்காசி அருகே கொடூரத்தின் உச்சமாக பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள குறிப்பிட்ட ஒரு தனியார் திரையரங்க வளாகத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில், ஒரு குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் தீப்பற்றி எரிந்து உள்ளது. 

நீண்ட நேரமாக தீ அந்த பகுதியில் எரிந்துகொண்டு இருந்ததால், அதிலிருந்து பிணம் எரியும் நாற்றம் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த வழியாகக் கடந்து சென்ற அப்பகுதி மக்கள் சிலர், தீ எரிந்துகொண்டு இருக்கம் இடத்திற்கு அருகில் சென்று பார்த்து உள்ளனர். 

அப்போது, பச்சிளம் குழந்தை ஒன்று தீயில் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

இதனால், பீதியடைந்த அப்பகுதி மக்கள், இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளனர். 

இது குறித்துக் காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தையின் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு முற்றிலும் அணைக்கப்பட்ட நிலையில், அந்த குழந்தை பிறந்து வெறும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் என்றும், தீ வைத்து எரித்துக்கொள்ளப்பட்டது ஆண் குழந்தை என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, குழந்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், “தீ வைத்த எரிக்கப்பட்ட குழந்தை யாருடையது? என்றும், எதனால் தீயில் இட்டு கொளுத்தினார்கள்? என்றும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சங்கரன்கோவில் பகுதி மற்றும் தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 4, 5, நாட்களில் பிறந்த குழந்தைகளின் விபரங்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் விபரங்களையும் மருத்துவமனைகளுக்கு சென்று போலீசார் சேகரித்து வருகின்றனர்.

அத்துடன், கடந்த 2 நாட்களில் யாரும் தங்களது குழந்தையைக் காணவில்லை என்று புகார் அளித்திருக்கிறார்களா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, குழந்தை பிறந்து வெறும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பச்சிளம் குழந்தையை தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.