கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியன இத்தனை நாட்கள் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் முதல் ஆண்டு வருமானம் சுமார் 10ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள கோயில்களை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. பிரபல கோயில்களான மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் உள்ளிட்ட கோயில்கள் திறக்கப்படவில்லை.

4ஆம் கட்ட ஊரடங்கின், புதிய தளர்வுகள் அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் இன்று கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த காலை முதலே பக்தர்கள் குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக, வட்டம் வரையப்பட்டுள்ளது. அம்மன் சன்னதி மட்டுமே திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 165 நாட்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதே போல் மசூதிகள், தேவாலயங்களும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்து தனித்தனியே அறிவிக்கப்பட்டுள்ளன.

வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கும் வழிமுறைகள்:

`கோயில்களில் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், பூ,பழம் அர்ச்சனை தட்டு உள்ளிட்டவற்றை கொண்டு செல்லக் கூடாது. விபூதி, குங்குமம், பிரசாதம், ஜடாரி உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கக் கூடாது. கொடி மரத்தை தொடுவதோ, அதன் அருகே பக்தர்கள் உட்காருவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள், அர்ச்சகர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல் தேவாலயங்களுக்கு வருவோர் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், பூக்களை கொண்டு வரக் கூடாது, புனித நூல்களை தொடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அது போல் மசூதிகளில் தனிநபர் இடைவெளியுடன் தொழுகைகள் நடத்தப்பட வேண்டும். அதற்கான விரிப்புகளை அவர்களாகவே கொண்டு வர வேண்டும். இறுதி தொழுகை இரவு 7.45 மணிக்கு தொடங்கி 8 மணிக்கு முடித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் இவை அனைத்து இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது இந்த வழிபாட்டு தலங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது'

எனக்கூறப்பட்டுள்ளது. இவற்றோடு சேர்த்து, வழிபாட்டு தலங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. கிருமிநாசினியும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது

இதுவொருபுறம் இருக்க, தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பின் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் உள்ள பூங்காவில், அதிகாலையிலேயே பொதுமக்கள் நடைபயிற்சியை தொடங்கினர். அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து முகக் கவசம் அணிந்தவாறு நடைபயிற்சியில் ஈடுபட்டனர். பூங்காவிற்குள் நுழையும் போது, கிருமி நாசினி தெளித்த பிறகே, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல 5 மாதங்களுக்கு பிறகு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தொடங்கியுள்ளனர். அரோகரா என்ற சரணகோஷம் முழங்க பக்தி பரவசத்தோடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. முன்பதிவு தொடங்கிய உடன் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்று தீர்ந்துள்ளன. ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. படி வழியாக மட்டுமே அனுமதிக்கப்டுகின்றனர். சமூக இடைவெளியை உறுதி செய்ய ஒரு மணி நேரத்திற்கு 50 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி  பார்த்தசாரதி கோயிலிலும் பக்தர்கள் குவிந்திருக்கின்றனர்.