இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் நியமிக்கப்படுவது குறித்து, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்து உள்ளது சூடு பறக்கும்
விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

கிரிக்கெட் உலகில் பல சரித்திர சாதனைகளைப் படைத்தர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற
ராகுல் டிராவிட், கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் பேட்டிங் ஆலோசகராக செயல்பட்டார். இதனையடுத்து, இத்தனை ஆண்டுக் கால
இடைவேளைக்குப் பறிகு, தற்போது அவர் இலங்கை சென்று விளையாடிக்கொண்டிருக்கும் இளம் இந்திய அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறார்.

அதே நேரத்தில், “தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரி, இங்கிலாந்தில் உள்ள இந்திய அணிக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருப்பதால் தான்,
இந்திய இளம் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக” கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்திருந்தது.

அத்துடன், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஏ அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து, இந்திய அணியின் அடுத்த
பயிற்சியாளர் குறித்த விவாதம் பரவலாக எழுந்தது. 

ஆனால், தற்போது “இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?” என்ற அந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு காரணம்
இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட் எடுத்த சில முடிவுகள் தான், அணியின் வெற்றிக்கு வித்திட்டதாகவும் காரணங்கள்
அடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்து ஆட்டமிழந்த நிலையிலும் கூட, பேட்டிங் ஆர்டரில் டிராவிட் சில மாற்றங்களை செய்தார். 

அதன்படி 8 வது ஆர்டரில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக, தீபக் சஹாரை களமிறக்கி நிதானமாக விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய வியூகம்
அமைத்திருந்தார்.

மேலும், அந்த போட்டியின் 45 வது ஓவரின் போது தீபக் சஹார் சற்று தடுமாறியதும், உடனே தீபக் சஹாரின் சகோதரர் ராகுல் சஹாரிடம் சில அறிவுரைகளை கூறி டிராவிட் அனுப்பியிருந்தார். 

டிராவிட்டின் இந்த அறிவுரைகளை கேட்ட பிறகே, தீபக் சஹார் நிதானமாக விளையாடினார். இதன் காரணமாகவே இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் 49.1 ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 

இதனால், “இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வேண்டும்” என்று, சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்திய அணிக்கு தற்போது பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் நிறைவடிகிறது. இதனால், அடுத்த முறையும் அவர் தான் பயிற்சியாளராக இருப்பார் என கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்தது. ஆனால், அவருடைய பயிற்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் இருப்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். 

அதன் காரணமாக, தற்போது பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியை எதிர்த்து, ராகுல் டிராவிட் போட்டியிட வேண்டும்” என்கிற கோரிக்கையும் பரவலாக எழுந்து உள்ளது.

தற்போது, இந்த விவகாரத்தில் கருத்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “இந்திய அணிக்கான பயிற்சியாளர் போட்டியில் ராகுல் டிராவிட் கலந்துக்கொள்ள விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன் என்றும், அப்படி அவர் போட்டியிட்டால் ரவி சாஸ்திரி மற்றும் டிராவிட் இடையே கடும் போட்டி நிலவும் என்றும், ஆனால் டிராவிட்டுக்கு அணி நிர்வாகம் முக்கியத்துவம் தரும் என்று கூற முடியாது என்றும், அத்துடன், நிர்வாகத்தினர் ரவி சாஸ்திரியையே, முதல் தேர்வாக வைத்திருப்பார்கள்” என்றும், அவர் கூறியுள்ளார்.

மிக முக்கியமாக, “பயிற்சியாளருக்கான போட்டியில் டிராவிட் ஒருவேளை பங்கேற்கவில்லை என்றால், ரவி சாஸ்திரி தான் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்றும், அவரை எதிர்த்து டிராவிட்டை தவிர வேறு யார் போட்டியிட்டாலும், அவர்களால் வெற்றி பெற முடியாது” என்றும், டி20 உலகக்கோப்பை முடிந்தப் பிறகும், இந்திய பயிற்சியாளர் பதவியில் மாற்றங்கள் எதுவும் இருக்காது” என்றும், ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளனர். 

ஆகாஷ் சோப்ராவின் இந்த கருத்து, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சூடு பறக்கும் விவாதம் இணையத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.