தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், பொது மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

தமிழகத்தில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

அதன் படி, “14 வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், ஓய்வு பெறும் 
ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்” என்று, போக்குவரத்து தொழிற் சங்கங்கள் சார்பில் முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தன. 

ஆனால், இது வரை அரசு அந்த கோரிக்கைகளுக்குச் செவி மடுக்காத காரணத்தால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினார்கள். இந்த போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட மொத்தம் 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட களத்தில் குதித்து உள்ளனர். ஆனால், இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதன் ஆதரவு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2 வது நாளாகத் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் ஓடும் பேருந்துகள் அனைத்தும் தற்போது வழக்கத்தை விட மிக மிக குறைந்த அளவில் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பொது மக்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதே நேரத்தில், அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், சென்னையில் பெரிய அளவில் பொது மக்களுக்குப் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

சென்னையைப் பொறுத்த வரையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, அலுவலகங்களுக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்குச் செல்வோர் முன் கூட்டியே திட்டமிட்டு மின்சார ரயில் நிலையங்களைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதனால், அனைத்து மின்சார ரயில் நிலையங்களிலும், பயணிகள் வழக்கத்தை விட அதிக அளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, போக்குவரத்து தொழிலாளர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஷேர் ஆட்டோக்களும் மற்றும் கால் டாக்சிகளை பொது மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், சென்னை தவிர மற்ற பகுதிகளில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால்,பொது மக்கள் தவித்துப் போய் உள்ளனர். வேலைக்குச் செல்ல முடியாமலும் ஊர் திரும்ப முடியாமலும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். 

முக்கியமாக, கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று, தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளதால், பொது மக்கள் கலக்கமடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.