தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது தொடர்பாக வரும் 28ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை இந்தியாவில் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அன்று முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. ஆகஸ்ட் மாதத்திலிருந்து கொரோனா நிபந்தனைகளுடன் திரைப்பட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. ஆனால், தியேட்டர்கள் திறக்கப்படாததால் கொரோனா காலத்திற்கு முன்பு தயாரான திரைப்படங்களை கூட வெளியிட முடியாத சூழல் நிலவி வந்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் ஐந்தாவது ஊரடங்கு தளர்வில், தியேட்டர்களை அக்டோபர் 15ம் தேதி முதல் திறக்கலாம் என்று அறிவித்தது. எனினும், தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டர்களை திறப்பதற்கான வழிகாட்டு முறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆந்திராவில் அனுமதி இருந்தும் தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டரை திறக்க முன்வரவில்லை. அவர்கள் மின்சாரக் கட்டணம் மற்றும் சில வரிகளில் இருந்து விலக்கு வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தியேட்டர்களை திறக்கக் கோரி முதல்வர் பழனிசாமியிடம் அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தனர். தியேட்டர்களை திறக்காததால் தங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டதாகவும், தியேட்டர்களை திறந்து தங்களுக்கு வாழ்வு கொடுக்கவேண்டும் என்று முதல்வரிடம் தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்பை வெளியிட ஆவண செய்வதாக அவர் உறுதியளித்ததாகவும் தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது தொடர்பாக வரும் 28ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதன் மூலம் ஆயுதபூஜை விடுமுறையில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும், நவம்பர் முதல் வாரத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.