“தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் எங்களுடைய எண்ணம்” என்று, தமிழக சட்டப்பேரவையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
பதிவு: ஜனவரி 07,  2022 11:20 AM
சென்னை, 

தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி இன்று 3 வது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில், முதல் நாள் கூட்டத்தில் தமிழக ஆளுநர் உரையாற்றினார். அதன் பிறகு, நேற்று தொடங்கிய 2 நாள் கூட்டத்தில், தமிழக வரலாற்றில் முதல் முறையாக தமிழக சட்டசபையில் “கேள்வி - பதில் நேரத்தை” நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அதன்படி,  தமிழக சட்டசபையானது இன்று முதல் தனது நேரடி ஒளிப்பரப்பை தொடங்கியதால், பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் தமிழக சட்டசபையின் 3 ஆம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கேள்வி பதில் நேரத்துடன் தொடங்கியது. 

இன்றைய தினமும் கேள்வி பதில் பகுதி மட்டும் நேரலை செய்யப்படுகிறது. முதலில், எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அப்போது, நேற்றைப் போலவே இன்றைய தினமும் “அம்மா உணவகம்” குறித்து கேள்வி எழுப்பி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் தான், சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பாக பதிலுரை ஆற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி” என்றும், முதல்வர் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், “எதிர்கால தமிழகம் எல்லா வகையிலும் உயர்வடைய நாம் உறுதியேற்க வேண்டும்” என்றும், அவர் சூளுரைத்தார்.

அத்துடன், “கொரோனா தொற்று காரணமாக எல்லா உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பளிக்க இயலவில்லை” என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

மேலும், “நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவளிக்கும் அதிமுகவிற்கு நன்றி” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

குறிப்பாக, “தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம் என்றும், அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாகத் தெரிவித்தார்.

அதே போல், “ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது” என்றும், முதல்வர் குறிப்பிட்டார்.

மிக முக்கியமாக, “தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் கருணாநிதியின் செம்மொழி பாடலை காகிதம் ஒட்டி மறைத்தது யார்? என்றும், அதிமுகவினரை முதலமைச்சர் கடுமையாக சாடினார்.

“தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும், திமுக ஆட்சிக்கு வந்த பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை ஒரே அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதே போல், “கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது என்றும், 
தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

முக்கியமாக, “திமுகவை சேர்ந்தவர்களே தவறு செய்தாலும், அண்ணா மீது ஆணையாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிப்படையாகவே பேசினார்.