சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் பழனிசாமி நேற்றைய தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலாலிடம் முதல்வர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

முதல்வர் ஆளுநரை சந்தித்த போது, அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோரும் ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, கொரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அறிக்கை அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்டம் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

கொரோனா காலத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை 6-வது முறையாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அத்துடன் அண்ணா பல்கலைக் கழகத்தை 2 ஆக பிரிப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அரசின் பணிகளை முதல்வர் ஈபிஎஸ் சிரத்தையாக கவனித்து வருகிறார் என்பதால் இந்த நேரத்தில் பன்வாரிலால் புரோஹித்தை அதற்காக கூட சந்தித்திருக்கலாமோ என ஐயப்படுகிறது. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்ட காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டபோது அவர்களுக்கு இடையே சமூக இடைவெளி தாண்டிய ஓர் அரசியல் இடைவெளி, நிர்வாக இடைவெளி இருப்பதை உணர்ந்திருக்கிறார் ஆளுநர். ஏற்கனவே துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதி நடந்த கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டம், மருத்துவ நிபுணர்கள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதல்வர் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தபோது தலைமைச் செயலகத்திலேயே இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் அந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இவ்வாறு கட்சியின் இரட்டைத் தலைமை குறித்த சலசலப்புகள் ஆட்சியிலும் எதிரொலிக்கின்றன என்று ஆளுநர் மாளிகைக்குத் தகவல்கள் சென்றிருக்கின்றன.

சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு சில மணிநேரங்கள் நடக்கும் என்றும் இந்த சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களை முதல்வர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.