தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது பற்றியும், கவனம் ஈர்த்த 10 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
என்பது பற்றியும் தற்போது பார்க்கலாம்.

தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன் பிறகு, தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அவர் ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்தார். 

துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு

- தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.

- தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு.

- விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு.

- காவல் துறைக்கு ரூ.8,930 கோடி.

- தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.

- நீதித் துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு.

- பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு.

- உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு.

- மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.

- பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்துவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு

- மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு.

- குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.

- நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.

- மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.

- சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.

- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு.

கவனம் ஈர்த்த 10 முக்கிய அறிவிப்புகள்

- தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு குறைப்பு.

- கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற 2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி.

- பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்காரச் சென்னை 2.0 திட்டம்.

- சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு மற்றும் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் சேவைக்கான நடவடிக்கை.

-  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தூத்துக்குடி விழுப்புரம், வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய 4 இடங்களில் டைடல் பார்க். மற்றும் திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம்,நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள். 

- குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம்.

- அரசு ஊழியர்களின் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு.

- வில்லங்க சான்றிதழ்களை இனி 1950 முதல் இணையதளத்திலேயே பார்வையிடும் வசதி.

- தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் 1 ஜிபிபிஎஸ் வேக திறன்கொண்ட இணைய வசதி.

- 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு. தினசரி ஊதியம் 300 ரூபாயாக உயர்வு.

அதே போல், தமிழக அரசின் மொத்த வருவாய் செலவினம் ரூ.2,61,188.57 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2021-22 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் பலரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.