“திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை” அளிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

தமிழக சட்டசபையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், காகிதவடிவில் தாக்கல் செய்யப்பட்டது. 

தற்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். 

முதன் முதலாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அந்த வகையில் இன்று முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கையான இ பட்ஜெட், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் படி, இந்த இ பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து, பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

அப்போது, அதிமுக உறுப்பினர்கள் திடீரென்று பேச அனுமதி கேட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுக்கு அனுமதி கிடைக்காததால், சட்டமன்றம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், எந்த தடையும் இன்றி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் உரையை தொடர்ந்து வாசித்து வருகிறார்.

அப்போது, “இயற்றலும் ஈட்டலும்” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

அதன் படி, “மதராஸ் சட்டமன்றத்தின் நூறாவது ஆண்டு இது” என்றும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு பேசினார்.

“நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது என்றும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது” என்றும், அவர் கூறினார்.

“கொரோனா 2 ஆம் அலை கடந்த சில மாதங்களாக மிகப் பெரிய அளவில் தாக்கியது என்றும், இதனால் கொரோனா பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

“பொருளாதாரத்தில் அரசின் சரிவை நிறுத்தி, நிதி நிலைமையை சீர்படுத்துவது முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும்’ அவர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  வாக்குறுதி தெரிவித்தார்.

அத்துடன், “தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2.29 லட்சம் மனுக்களுக்கு இது வரை தீர்வு காணப்பட்டுள்ளதாகவும்”  நிதியமைச்சர் சுட்டிக்காட்டி பேசினார்.

“மத்திய அரசின் வரிவிதிப்பு முறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதாகவும், பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு 32.90 ரூபாயான உயர்த்தி உள்ளது என்றும், டீசல் மீதான வரியை மத்திய அரசு 31.80 ரூபாயாக உயர்த்தி உள்ளது” என்றும், கவலைத் தெரிவித்த நிதியமைச்சர், “பெட்ரோல், டீசலை நியாயமான விலையில் வழங்குவது ஒன்றிய அரசின் கடமை” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

“அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறை கொண்டு வரப்படும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

“கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்க வல்லுநர் குழுவை அரசு அமைக்கும் என்றும், அனைத்து துறை சார்ந்த தரவுகளை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

“2.05 லட்சம் ஹெக்டேர் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், “பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்” என்றும், தெரிவரித்தார்.

மேலும், “நில விவகாரங்கள், கொள்முதல் பிரச்னைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்த சிறப்பு செயலகம் அமைக்கப்படும்” என்றும், அவர் உறுதி அளித்தார்.

அதே போல், “1921 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும் என்றும், அரசின் உள்தணிக்கை அமைப்பு முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்” என்றும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் வாசித்தார்.