தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை தமிழக அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி வெளியிட்டார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் சராசரி அடிப்படையில் 50 மதிப்பெண்களும், 11 ஆம் வகுப்பில் 20 சதவீத மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் செய்முறை மற்றும் அகமதிப்பீட்டில் 30 சதவீதம் மதிப்பெண்களும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. 

இப்படியாக, மொத்தம் 100 சதவீதத்துக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான பணிகளில் தேர்வுத் துறையும், கல்வித்துறையும் ஈடுபட்டன.

இதனையடுத்து, 12 ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாடப்பட்டு உள்ளன.

அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்ட 4 இணையதளங்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
http://tnresults.nic.in, 
http://dge1.tn.nic.in, 
http://dge2.tn.nic.in, 
http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

“மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள், பள்ளியில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்” எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல், “22 ஆம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்று உள்ளனர். வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்று உள்ளனர். தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்று உள்ளனர். 

முக்கியமாக, பிளஸ் 2 மதிப்பெண் விவரங்களை சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ் 2 தேர்வு  முடிவுகளை வெளியிட்டார். 

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “22 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்” என்று, குறிப்பிட்டார். 

மேலும், “+2 தேர்வில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் தேர்ச்சி உள்ளதாக”  அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

அதாவது, “பிளஸ் 2 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு எழுதலாம்” என்றும், அவர் தெரிவித்தார்.