“தமிழகம் முழுவதும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து” தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனாவின் 3 ஆம் அலை வீசிக்கொண்டிருக்கிறது. 

இப்படி, வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 

எனினும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பொதுத் தேர்வு காரணமாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிக்கைக்கு முன்பு வரை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் எப்போதும் போல் நடைபெற்று வந்தன.

ஆனால், தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு வந்தது. இதில், பல மாணவர்களும் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. 

அத்துடன், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது, 20 ஆயிரத்திற்கு மேலாக பதிவாகி வந்தன. என்றாலும், அடுத்து வரும் நாட்களில் இந்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது, இன்னும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இப்படியாக, தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், இந்த கொரோனா பெருந்தொற்றும் மாணவர்களுக்கு மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், தற்போது தமிழக அரசு சில அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை தற்போது விடுமுறை அளித்து, தமிழக அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது. 

இவற்றுடன், ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளையும் தற்போது ஒத்திவைக்கப் படுவதாகவும், இந்த திருப்புதல் தேர்வுகள் குறித்த அறிவுப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், முன்னதாக தமிழக அரசு கூறி உள்ளது.

இப்படியாக, “தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டே 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து” தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, “ஆசிரியர்கள் வரும் 19 ஆம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடரும் என்றும், அலுவல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும்” என்றும்,  பள்ளி கல்வித் துறை விளக்கமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.