தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலத்தவர் நுழைவதற்கு வெளிநாடுகளில் உள்ளது போல் விசா அதிகாரம் வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று, குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, “சீர்காழியில், வடநாட்டு நகை அடகு வியாபாரி வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளையர்கள், அவரது மனைவி மற்றும் மகளை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளனர். நகை வியாபாரி மற்றும் மருமகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் தொடர்புள்ள வடமாநிலக் கொள்ளையர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, ஒருவர் காவல்துறையினரைத் தாக்கியதாகவும், அதனால் அவரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ளவர்கள் நகைகளுடன் பிடிபட்டுள்ளனர்” என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

“கடந்த வாரம், கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூரில் இயங்கி வரும் மலையாள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகைகள் உள்பட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற வடமாநிலக் கொள்ளையர்களை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்குத் துரத்திச் சென்று தமிழகக் காவல் துறையினர் பிடித்து வந்துள்ளனர்” என்றும், குறிப்பிட்டுள்ளனர்.

“இதேபோல், சென்னையில் இயங்கிவரும் பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் இருந்து 5 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்ற வடமாநிலக் கொள்ளையர்களை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர்” என்பதையும், சுட்டிக்காட்டி உள்ளனர்.

“இவ்வாறு, அடுத்தடுத்து நடைபெற்று வரும் வடமாநிலக் கொள்ளையர்களின் கொள்ளை மற்றும் கொலைக் குற்றங்கள் பெரும் அச்சமூட்டுகின்றன. தமிழ்நாட்டில் குடியேறும் வட மாநிலத்தவருக்கு எவ்வித பதிவு முறையும் இல்லாததால், ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்ட பல கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் குடியேறி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் உள்ளது” என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

“எந்த விதப் பதிவும் இல்லாததானால் தமிழ்நாடு காவல் துறையினர் பல வழக்குகளில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். தமிழ் மக்கள் தங்கள் சொந்த தாயகத்திலேயே வெளி மாநிலத்தவரால் தமக்கு பாதிப்பு ஏற்படுமென அச்சத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்றும், கவலைத் தெரிவித்துள்ளது.

“எனவே, தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குடியேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே குடியேறியுள்ள வெளி மாநிலத்தவரை படிப்படியாக வெளியேற்ற வேண்டும்” என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தி உள்ளது.

மேலும், “மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வெளி மாநிலத்தவர் உள்ளே நுழைய “உள் அனுமதிச்சீட்டு முறை” (Inner Line Permit) இந்திய அரசால் செயல்படுத்தப்படுவதைப் போல், தமிழ்நாட்டிற்குள்ளும் பிற மாநிலத்தவருக்கு உள் அனுமதிச்சீட்டு முறை வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது” என்றும், மேற்கொள் காட்டி உள்ளது.

“தற்போது, வெளி மாநிலத்தவரால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குலைந்து மக்கள் அச்சப்படும் சூழல் நிலவுகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு “உள் அனுமதிச்சீட்டு முறை”யைக் கொண்டு வர வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” என்றும், அந்த அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.