“தமிழ்நாடு முழுவதும் 10, 11, 12 ஆம் வகுப்புகளை பிப்ரவரி மாதத்தில் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்து உள்ளதாக” பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனாவின் 3 ஆம் அலை தீவிரவமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இப்படி, வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முதலில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பொதுத் தேர்வு காரணமாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிக்கைக்கு முன்பு வரை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் எப்போதும் போல் நடைபெற்று வந்தன.

ஆனால், அதி வேகமாக கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு இருந்ததால் மாணவர்கள் பலரும் வரிசையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

அத்துடன், கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது, இன்னும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இப்படியாக, தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், இந்த கொரோனா பெருந்தொற்றும் மாணவர்களுக்கு மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து, தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது.

இந்த நிலையில், ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முதலமைச்சர் எவ்வளவு முயற்சி செய்கிறார் என்று அனைவருக்கும் தெரியும்” என்று குறிப்பிட்டார். 

“அரசு பள்ளிகளை மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்றும், இரு மொழி கொள்கை தான் நமது கொள்கை என்றும், அதிலிருந்து பின்வாங்க மாட்டோம்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

அத்துடன், “கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை ஓய்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன என்றும், ஆனால் வட கிழக்கு பருவமழை காரணமாக நவம்பரில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது” என்றும், கூறினார். 

“இப்படியாக, பருவமழை ஓய்ந்து டிசம்பர் மாதத்தில் இருந்தாவது நேரடி வகுப்புகளை நடத்தலாம் என பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டிருந்த நிலையில் தான், கொரோனா 3 வது அலை தீவிரமடைய தொடங்கியது” என்றும், குறிப்பிட்டு பேசினார்.

“இதனால், மாணவர்களின் நலன் கருதியே, அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது” என்றும், அவர் நினைவுகூர்ந்தார். 

மேலும், “ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி மாதத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும்” பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் கட்டாயம் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.