தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கலைகட்டி உள்ளது.

“உழவுக்கு உயிரூட்டு உழவர்க்கு வாழ்வூட்டும்” என்கிறார்கள் அறிஞர்கள் பெருமக்கள்.

தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரியமாக காலம் காலமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

முக்கியமாக, விவசாயம் செய்யும் உழவர் பெருமக்களைக் கொண்டாடும் திருநாளாகவே இந்த தை மாதம் பிறப்பு தினம் நெடுங்காலம் தொட்டு தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக, விவசாயத்திற்கும் விவசாயத்தைத் தரும் இயற்கைக்கும், விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் விழாவாகத்தான், இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த பண்டிகை திருநாளில் வேளாண் விவசாய பெருமக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு பழங்கள் வைத்து, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாம் கொண்டாடி வருகிறோம். பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வருவது போல், விவசாயிகளின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இத்திருநாள் காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 

அதன் படி, தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் திருநாள் கலைகட்டி உள்ளது. கிராமங்கள் தோறும் உள்ள விவசாய மக்கள் தங்களது வீடுகள் மற்றும் அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று, பொங்கல் வைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். 

மிக முக்கியமாக, விவசாயம் செழிக்க உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் பொங்கல் வைத்து படையலிடப்படுகிறது. இவற்றுடன், கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும், ஜல்லிக்கட்டு போட்டிகள், ரேக்ளா பந்தயம் போன்றவற்றுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று, கூறியுள்ளார்.

அதே போல், உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி உள்ளது. இந்த போட்டியானது,  மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 

காளைகளை அடக்கி பரிசுப் பொருட்களை வென்று செல்ல மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் ஆவலுடன் களம் கண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்கின்றனர்.